வாஷிங்டன், டிசம்பர் 8 – அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இனவெறித் தாக்குதல்களும், கொலைகளும் நடந்து வருகின்றன.
நீண்ட காலத்திற்குப் பிறகு அதிபர் ஒபாமாவின் ஆட்சியில் தான் இந்த இனவெறி தாக்குதல்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களில் 3-க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர் காவல் துறையினரால் பல்வேறு காரணங்களுக்காக சந்தேகத்தின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
அமெரிக்க நீதிமன்றமும் துப்பாக்கிச் சூடு நடத்திய இரு காவல் துறை அதிகாரிகளை விடுதலை செய்தது. பெரும் போராட்டங்களுக்கு வழி வகுத்துள்ள இந்த சம்பவம் அங்கு மீண்டும் இனப் போருக்கான தொடக்கமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்த இனவெறி தாக்குதல்கள் குறித்து வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கூறுகையில், “அமெரிக்காவின் அதிபராக ஒபாமா ஆட்சிக்கு வந்தபிறகு தான் இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன”.
“அமெரிக்காவின் முதல் கறுப்பின தலைவரின் ஆட்சியில் நடைபெறும் இந்த தாக்குதல்கள், உண்மையிலேயே வியப்பாக உள்ளது. இதை சொல்வதற்கு நான் வருந்துகிறேன். காரணம், நான் அவர்மீது தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.