பெய்ஜிங், டிசம்பர் 8 – சீனாவின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான ஜுஹூ யாங்காங் (72) ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு வழிகளில் அவர் சேர்த்த பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துக்கள் அனைத்தையும் சீன அரசு பறிமுதல் செய்தது.
சீனாவின் அதிபராக பதவி ஏற்றது முதல், ஊழலை ஒழிக்க முன்னுரிமை அளித்து வரும் ஜி ஜிங்பிங், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், மூத்த அதிகாரிகளை அடுத்தடுத்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
இந்நிலையில், ஜிங்பிங்கின் அதிரடி நடவடிக்கைகளில் தற்போது சிக்கி உள்ளவர், அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜுஹூ யாங்காங்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட ஜுஹூ மீது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், அதிக அளவிலான சொத்துக்களை நாட்டிற்கு எதிரான வழிகளில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் அவருக்கு மரண தண்டனை அளிக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக சீன அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜுஹூ யாங்காங் முன்னாள் அதிபர் ஹூ ஜிந்தோவோ ஆட்சியின் போது, உள்நாட்டு பாதுகாப்புத் துறை தலைவராகவும், காவல் துறை, உளவுத் துறை, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் முக்கியப் பதவிகளை வகித்திருந்தார்.
மேலும் அவர், சீனாவின் மிக உயர்ந்த ஆணையமான 9 பேர் கொண்ட நிலைக்குழுவிலும் இடம் பெற்றிருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜுஹூ யாங்காங் அனைத்து அரசு பொறுப்புகளில் இருந்தும் ஓய்வு பெற்ற நிலையிலும், அவர் கட்சியில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார்.
இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டு இருப்பது சீன அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.