கோலாலம்பூர், டிசம்பர் 10 – ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோப் ஆர் முல்லரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்ய கசானா நிறுவனத்திற்கு அனைத்து உரிமையும் உள்ளது என டத்தோஸ்ரீ அப்துல் வாகிட் ஓமார் தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மாஸ் நிறுவனத்தை மீட்பதற்காக, மலேசிய அரசாங்கத்தின் முதலீட்டு அமைப்பான கசானா நிறுவனம், சுமார் 6 பில்லியன் ரிங்கிட் அளவிற்கு முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், மாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆர் முல்லர் நியமனம் செய்யப்பட இருப்பதாக கசானா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தது. இதனை முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து பிரதமர் துறையின் பொருளாதாரத் திட்டமிடலுக்கான அமைச்சர் அப்துல் வாகிட் ஓமார் கூறியதாவது:-
“மாஸ் நிறுவனத்தை மீட்கும் பொருட்டு கசானா அறிவித்த 12 அம்சத் திட்டத்தின் மீது அரசிற்கு நம்பிக்கை இருக்கின்றது. விமான நிறுவனத்தை இலாபகரமானதாக மாற்ற கிறிஸ்டோப் ஆர் முல்லர், சரியான நபர் என கசானா தீர்மானித்து இருந்தால், அவரை தேர்ந்தெடுக்கும் முழு உரிமை அந்நிறுவனத்திற்கு உண்டு. இது தொடர்பாக அனைத்து உரிமைகளும் கசானாவிற்கு வழங்கப்பட்டுள்ளன.”
“அதுதவிர, மாஸ் நிறுவனத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு கசானாவிடம் உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.