அவர் கிழக்கு சபாவில் உள்ள சண்டகானுக்கு புதன்கிழமை காலை 6.45 மணிக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.
கடந்த ஜூன் 16ஆம் தேதியன்று சப்போங்கில் உள்ள தனது மீன் பண்ணையிலிருந்து ஆயுதமேந்திய பிலிப்பைன்ஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார் சான் (32 வயது).
தாங்கள் கேட்ட பிணைத் தொகையான 3 மில்லியன் ரிங்கிட்டை தராவிட்டால் சானை கொன்றுவிடுவதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து தனது கணவரை மீட்டுத் தருமாறு அரசுத்தரப்புக்கு உருக்கத்துடன் கோரிக்கை வைத்தார் சானின் மனைவி சின் பெக் யென் (42 வயது).
இந்நிலையில் தீவிரவாதிகளுடன் மலேசியத் தரப்பில் இருந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக 182 நாட்களுக்குப் பின்னர் சான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனினும் கடந்த ஜூலை 12ஆம் தேதி அபு சயாப் இயக்கத்தின் மற்றொரு பிரிவால் கடத்தப்பட்ட கடற்படை காவல் பிரிவைச் சேர்ந்த சாகியா அலெய்ப் (26 வயது) இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவரையும் விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.