பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 9 – சுசுகி கிண்ண கால்பந்து போட்டியின்போது வியட்நாம் ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி மன்னிப்பு கோரியுள்ளார்.
ஷா ஆலமில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அரை இறுதிப் போட்டியின்போது அரங்கில் இருந்த வியட்நாமிய ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தாம் கண்கூடாக கண்டதாக குறிப்பிட்டுள்ள அவர், இச்சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் மலேசிய கால்பந்து சங்கத்தின் அறிக்கைக்காக தாம் காத்திருப்பதாக கூறியுள்ளார்.
“இதுபோன்ற வன்முறை செயல்பாட்டுக்கு மன்னிப்பே கிடையாது. மேலும் போட்டியைக் காண வந்த வியட்நாமியர்கள் நமது விருந்தினர்கள். அவர்கள் மலேசியாவில் பணியாற்றுகிறார்களா அல்லது விடுமுறையை கழிக்க வந்தவர்களா? என்பது முக்கியமல்ல. இத்தகைய தாக்குதல்கள் மலேசிய கலாச்சாரம் அல்ல,” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் கைரி.
இந்தப் போட்டியில் வியட்நாம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதையடுத்து அரை இறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டம் வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற உள்ளது.
இதைத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள கைரி, ஹனோயில் கூடும் மலேசிய ரசிகர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“சில அடாவடிப் பேர்வழிகள் நடத்திய இந்தத் தாக்குதலுக்காக வியட்நாமியர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் அந்த அடாவடிப் பேர்வழிகள் மன்னிப்பு கோர மாட்டார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையிடம் கேட்டுள்ளேன். தாக்குதலில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் மலேசியாவைப் பிரதிநிதிப்பவர்கள் அல்ல. குறைந்த எண்ணிக்கையிலான அவர்களுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன். ஹனோயில் இரண்டாவது சுற்று ஆட்டம் பலத்த போட்டியுடனும், ஆட்ட அரங்கில் மிகுந்த நட்புணர்வுடனும் நடைபெறும் என நம்புவோம்,” என்று கைரி மேலும் தெரிவித்துள்ளார்.