கோலாலம்பூர், டிசம்பர் 9 – தனது கடப்பிதழ் முடக்கப்பட்டுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி மீதான தாக்குதலை ஃபேஸ்புக் வழி தொடர்கிறார் வலைப்பதிவாளர் ஆல்வின் டான்.

“எனது கடப்பிதழை முடக்கப் பயன்படுத்திய தனது அபார ஆற்றலை, ஊழலுக்கு எதிராகவும் குற்றங்களைத் தடுக்கவும் உள்துறை அமைச்சர் பயன்படுத்தி இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆனால் ஐயகோ…,” என்று தனது பதிவு ஒன்றில் ஆல்வின் டான் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் தன்னைப் பிடிக்கவும் தனது கருத்துக்களை எதிர்க்கவும் புத்ரா ஜெயா ஏன் இவ்வளவு ஆர்வத்துடன் உள்ளது என்பது தமக்குப் புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அம்னோவின் செயல்பாடுகளை இணையம் வழி விமர்சிக்கும் ஆயிரக்கணக்கான படிப்பறிவு உள்ளவர்களில் நானும் ஒருவர். நான் யாருக்கும் எந்த வகையிலும் அரசியல் ரீதியில் அச்சுறுத்தலாக இல்லை. ஆனால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மத்தியில் என்னை மட்டும் ‘அவர்கள்’ தனிமைப்படுத்தி குறிவைப்பது ஏன்?” என்று ஆல்வின் டான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடப்பிதழ் முடக்கப்பட்டதால் அமெரிக்காவில் அடைக்கலம் கோரி, தான் தாக்கல் செய்துள்ள மனு மீதான நடவடிக்கை மேலும் வேகம் பெறும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மலேசிய அமைச்சர்களின் செயல்பாடு தனக்கு முட்டாள்தனமாக தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.
“கடப்பிதழ் முடக்கப்பட்டது எனில் குடியுரிமையை இழந்துவிட்டதாக அர்த்தமல்ல. ஐ.நா. பயண ஆவணத்தை அமெரிக்க குடிநுழைவுத்துறையிடமிருந்து பெறுவதற்கான தகுதி எனக்கு வந்துள்ளது,” என்று ஆல்வின் டான் மேலும் கூறியுள்ளார்.