கோலாலம்பூர், டிசம்பர் 12 – அண்டிரொய்டு மற்றும் ஐஒஎஸ் திறன்பேசிகளில் யூ-டியூப் செயலியை பயனர்கள், இணையம் இல்லாமல் பயன்படுத்தும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டு இருக்கின்றது.
சில தருணங்களில் குறைந்த அலைவரிசை, விலை அதிகமான தரவுத் திட்டம் போன்ற காரணங்களால் நாம் திறன்பேசிகளில் யூ-டியூப்-ஐ பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனை தவிர்க்க கூகுள், யூ-டியூப்-ல் திறன்பேசிகளுக்கான பதிவிறக்கம் செய்யும் வசதியை மேம்படுத்த இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்நிலையில், நேற்று முதல் அந்த வசதி, யூ-டியூப்-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த புதிய வசதி மூலம் பயனர்கள், தங்கள் அண்டிரொய்டு மற்றும் ஐஒஎஸ் திறன்பேசிகளில் யூ-டியூப் செயலியைப் பயன்படுத்தி காணொளிகளை பதிவு இறக்கம் செய்து தேவையான பொழுது கண்டு ரசிக்கலாம்.
எனினும் இந்த வசதி தற்சமயம், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் திறன்பேசிகளின் விற்பனை அதிகமாக இருந்தாலும், கட்டணம் செலுத்தி இணையத்தை திறன்பேசிகளில் பெறும் ஆர்வம் கட்டண விலைகள் காரணமாக குறைந்தே காணப்படுகின்றது.
பதிவிறக்கம் செய்யப்படும் காணொளியானது 48 மணி நேரம் வரை நமது திறன்பேசிகளில் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்த புதிய வசதி பற்றி கூகுள் இந்தியாவின் மேலாண்மை இயக்குனர் ராஜன் ஆனந்தன் கூறுகையில், “இந்தியாவில் யூ-டியூப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனினும், இந்தியாவில் குறைந்த அலைவரிசை மற்றும் விலை அதிகமான தரவுத் திட்டம் போன்ற காரணங்களால் யூ-டியூப்-ன் பயன்பாடு கடினமாகிறது. இதனை போக்கவே இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.