நியூயார்க், டிசம்பர் 12 – இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 6.3 சதவீதமாக உயரும். இதன் மூலம் தெற்காசிய அளவில் சிறந்த பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கும் என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலக பொருளாதார சூழல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் தொடர்பாக ஐ.நா கடந்த புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள், நுகர்வோருக்கும் வர்த்தகர்களுக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருவதாக உள்ளது.
இந்தியா அதனை செயல்படுத்தும் பட்சத்தில் சிறந்த பொருளாதார முன்னேற்றத்தைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், உலக நாடுகளின் பொருளாதாரமானது, அடுத்த இரு ஆண்டுகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் வளர்ச்சி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
எபோலா பாதித்த வடக்கு ஆப்பிரிக்க நாடுகளும், உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் நிறைந்த உக்ரைனும் அடுத்து வர இருக்கும் நிதியாண்டுகளில் கடும் பொருளாதார சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார வளர்ச்சியானது, 2015-ல் 3.1 என்ற சதவீதமாகவும், 2016-ல் 3.3 சதவீதமாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரையில், 2015-ல் 5.7 என்ற அளவிலும், 2016-ல் 6.3 சதவிகிதமாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டிருப்பதாக அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.