Home நாடு பெண் மந்திரி பெசார் வரக்கூடாது எனக் கருதியதில்லை – சிலாங்கூர் சுல்தான் விளக்கம்

பெண் மந்திரி பெசார் வரக்கூடாது எனக் கருதியதில்லை – சிலாங்கூர் சுல்தான் விளக்கம்

613
0
SHARE
Ad

Sultan-Selangor-Sultan-Sharafuddin-Idris-Shah1ஷா ஆலாம், டிசம்பர் 12 – சிலாங்கூர் மாநிலத்திற்கு பெண் ஒருவர் மந்திரி பெசாராக பொறுப்பேற்க தாம் எதிர்ப்பு தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான தகவலுக்கு சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒருசிலர் அரண்மனையை அவசரப்பட்டு குற்றம் சாட்டி இருப்பதாக அவர் கூறியுள்ளார். “பெண் ஒருவர் மந்திரி பெசார் ஆவதை நான் விரும்பவில்லை என்று கூறி அவர்கள் பிரச்சினை கிளப்பினர். இத்தகைய கருத்துக்கள் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் சில குறிப்பிட்ட ஊடகங்களில் வெளிவந்தன. எந்தப் பெண்ணும் மந்திரி பெசார் ஆவதை நான் எதிர்த்ததில்லை. ஆனால் அப்படி மந்திரி பெசாராக வர நினைப்பவர் பேங்க் நெகாரா ஆளுநர் (டான்ஸ்ரீ டாக்டர் செத்தி அக்தர் அஜீஸ்) போல் ஆற்றல் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து,” என்று சிலாங்கூர் சுல்தான் தெரிவித்துள்ளார்.

உயர் பதவிகள் வகித்த செத்தி, மலாயா பல்கலைக்கழக வேந்தர் தோபுவான் டாக்டர் ஆயிஷா ஓங் போன்றவர்கள் மீது – அவர்கள் பெண்களாக இருந்தாலும் – தாம் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், சிறந்த பெண் தலைவர்களுக்கு இவர்கள் நல்ல உதாரணமாக விளங்குவதாகக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“அவர்களின் குணம் மற்றும் ஆற்றல் குறித்து நிச்சயமாக சந்தேகப்பட மாட்டேன். யாருடைய கட்டுப்பாட்டிலும் இன்றி அவர்களால் சுயமாகச் செயல்பட முடியும். சிலாங்கூர் மாநிலத்திற்காக சுயமாக முடிவெடுக்கக் கூடிய மந்திரி பெசாரே தேவை,” என்று சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா மேலும் தெரிவித்துள்ளார்.