ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் பல பகுதிகளை தீவிரவாத தாக்குதல் மூலம் ஆக்கிரமித்து வரும் ஐஎஸ்ஐஎஸ், அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு எதிரான சதிச் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றது. மேலும், அவர்களுக்கு தங்களது எதிர்ப்பை காட்டும் வண்ணம், அந்நாடுகளின் பிணைக் கைதிகளை கொடூரமாக கொலை செய்து, அதை காணொளியாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றது.
மேலும், பல நாடுகளில் அந்த இயக்கத்தின் கிளைகளை பரப்பும் நோக்கத்தோடும் அந்த அமைப்பு நட்பு ஊடக வலைத் தளங்களை ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 செய்தி நிறுவனம் சமீபத்தில் ஒரு உண்மையை பகிரங்கப்படுத்தியது. டுவிட்டர் இணையதளத்தில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கோட்பாடுகளை மேதி மசூத் என்ற பெயர் கொண்ட ஒருவர் ஷமி விட்னஸ் என்ற பக்கத்தின் மூலம் வெளியிட்டு வருவதாகவும், அந்த பக்கத்தை தீவிரமாக கண்காணித்ததில், அந்த பக்கம் பெங்களூரைச் சேர்ந்த நபரால் இயக்கப் படுவதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும், அந்த பக்கத்தை இயக்கும் நபரின் விவரத்தை அந்த நிறுவனம் குறிப்பிடவில்லை. மேலும், கண்காணிக்கப்பட்ட அந்த நபர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணையவில்லை என்றும், குடும்ப பொறுப்புகளிலிருந்து விலக வாய்ப்பு கிடைத்திருந்தால் எப்போதோ ஐஎஸ்ஐஎஸ்-ல் இணைந்திருப்பேன் என்று அந்த நபர் கூறியதாகவும் சேனல் 4 நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சேனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த செய்தியால், பெங்களூரு காவல்துறை பாதுகாப்பை கடுமையாக்கி உள்ளது. மேலும், குறிப்பிட்ட அந்த டுவிட்டர் பக்கம் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரிக்கத் தொடங்கி உள்ளதாக பெங்களூரு காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.