கோலாலம்பூர், டிசம்பர் 13 – மஇகா மறு தேர்தல் நடத்த வேண்டுமென சங்கப் பதிவதிகாரி விடுத்த உத்தரவுக் கடிதத்தில் பல தவறுகள் இருக்கின்றன என மஇகா மத்திய செயலவையின் மூத்த உறுப்பினர் டான்ஸ்ரீ நிஜார் கூறியிருக்கின்றார். சங்கப் பதிவக முடிவு அறிவிக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு வாரம் கழித்து இந்த அறிக்கையை அவர் விடுத்திருக்கின்றார்.
நேற்று கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நாடு திரும்பிய அடுத்த நாளே நிஜார் இத்தகைய அறிக்கையை விடுத்திருப்பதால், தனது உத்தேச முடிவை நிஜார் மூலம் பத்திரிக்கை அறிக்கை வழியாக வெளியிட்டு பழனிவேல் ஆழம் பார்க்கின்றாரா என்ற எண்ணம் தற்போது எழுந்துள்ளதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.
நிஜார் பழனிவேலுவுக்கு நெருக்கமானவர் என்பது மஇகா வட்டாரங்களில் ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் பதவியையும் நிஜார் வகிக்கின்றார்.
ஆங்கில இணைய செய்தித் தளமான “தெ மலேசியன் டைம்ஸ்” நிஜாரின் அறிக்கையை வெளியிட்டிருந்தது.
“அரசாங்க இலாகாவான சங்கப் பதிவகத்தின் முடிவை நான் மதிக்கின்றேன். ஆனால், மஇகா பிரச்சனைக்குத் தீர்வாக மறு தேர்தல் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. சங்கப் பதிவக அறிக்கையில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்றும் நிஜார் தெரிவித்தார்.
மூன்று விவகாரங்களைச் சுட்டிக்காட்டி சங்கப் பதிவக உத்தரவு தவறுதலானது என நிஜார் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
முதலாவது, சங்கப் பதிவகத்தின் முடிவை ஏற்று மஇகா செயல்படுத்த முனைந்தால், மஇகா சட்டவிதிகளின் மற்ற சில விதிகளை மீறுவதற்கு ஒப்பாகும் என்று நிஜார் கூறியுள்ளார்.
ஆனால், எந்த சட்ட விதிகள் அவ்வாறு முரண்படுகின்றன என்பது குறித்து நிஜார் தனது அறிக்கையில் விளக்கவில்லை.
இரண்டாவதாக, சங்கப் பதிவகத்தின் முடிவை மஇகா செயல்படுத்த முனைந்தால், அது இயற்கை நீதிகளுக்கு (natural justice) புறம்பாக, பல சட்டங்களை மீறியதற்கு ஒப்பாகும் என்றும் நிஜார் தெரிவித்துள்ளார். மீண்டும் எத்தகைய விதிமீறல்கள் நடக்கும் என்பதையும் நிஜார் தனது அறிக்கையில் விளக்கவில்லை.
மூன்றாவதாக, சங்கப் பதிவக உத்தரவை மஇகா செயல்படுத்துவது நடைமுறைச் சட்டங்களை (procedural law) மீறுவதாகும், காரணம், சங்கப் பதிவகம் காரணம் கோரும் கடிதம் எதையும் முதலில் வழங்கவில்லை என்றும் நிஜார் கூறியுள்ளார்.
“இத்தனை மாதங்கள் புகார்கள் மீது விசாரணை நடத்திய பின்னர் இப்படிப்பட்ட ஒரு கடிதம் சங்கப் பதிவக அலுவலகத்தில் இருந்து வெளியாகும் என்பதை நம்புவதற்கு எனக்கு கடினமாக இருக்கின்றது. எனவே சங்கப் பதிவதிகாரியிடமிருந்து மேலும் கூடுதல் விளக்கங்கள் பெற வேண்டும் என்றும், அல்லது உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடியிடம் மேல் முறையீடு செய்யவேண்டும் என்றும் அல்லது நீதிமன்றத்தின் வாயிலாக சங்கப் பதிவக முடிவை மறு ஆய்வு செய்ய (judicial review) விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நான் மத்திய செயலவைக்கு சிபாரிசு செய்யப் போகிறேன்” என நிஜார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“முரண்பாடான விவகாரங்களுக்கு தீர்வு காணப்படும்வரை சங்கப் பதிவகத்தின் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் நான் கேட்டுக்கொள்ளப் போகின்றேன்” என்றும் நிஜார் மேலும் கூறியுள்ளார்.
சங்கப் பதிவகத்தின் உத்தரவை செயல்படுத்துவது பின்னால் தீர்க்கப்பட முடியாத அளவிற்கு மேலும் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிகோலும் என்றும் நிஜார் எச்சரித்துள்ளார்.