புதுடெல்லி, டிசம்பர் 13 – சுவிஸ் வங்கி கருப்பு பண விசாரணையில், இந்தியர்கள் 79 பேரின் கணக்கில் ரூ.4 ஆயிரத்து 479 கோடி பணம் உள்ளது சிறப்பு புலனாய்வு குழுவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி வங்கியில் கணக்கு வைத்துள்ள 628 பேரின் பட்டியலை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் (எஸ்.ஐ.டி), மத்திய அரசு ஒப்படைத்தது.
இவர்கள் தாக்கல் செய்த முதல் அறிக்கையில், 289 பேரின் கணக்கில் பணம் எதுவும் இல்லை எனவும், பலரது பெயர்கள் இரண்டு முறை பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எஸ்.ஐ.டி தனது 2-வது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது; மத்திய அரசு அளித்த 628 பேர் பட்டியலில் 201 பேர் வெளிநாட்டு வாழ் இந்தியர்களாகவும், கண்டுபிடிக்க முடியாதவர்களாகவும் உள்ளனர். மேலும் 427 பேர் மீது வழக்கு தொடர முடியும்.
79 நிறுவனங்கள் மற்றும் நபர்களின் கணக்கில் ரூ,4,479 கோடி உள்ளது. இவர்கள் மீது 300-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கணக்கில் காட்டப்படாத இந்த பணத்துக்கு வரி மற்றும் வட்டியாக ரூ.2,926 கோடி விதிக்கப்பட்டுள்ளது.
46 வழக்குகளில் வருமான வரித்துறை சட்டப்படி அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெரிந்தே வரி ஏய்ப்பு செய்ததாக 6 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
10 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீது தேவையான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர உள்நாட்டிலே கணக்கில் காட்டப்படாத ரூ.14,958 கோடி சொத்துக்கள் இருப்பதை வருமான வரித்துறையும், அமலாக்கப் பிரிவும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒடிசாவில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட ஒருவரின் ரூ.400 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
கர்நாடகாவில் ரூ.996 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட்டில் ரூ.452 கோடி சொத்துக்களையும், ஆந்திராவில் ரூ.1,093 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் அமலாக்கப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
மேலும் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தவர்களின், உள்நாட்டு சொத்துக்களை கைப்பற்றும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவும் எஸ்.ஐ.டி ஆலோசனை வழங்கியுள்ளது.
கருப்பு பண பறிமாற்றத்தை தடுக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி புள்ளி விவரங்களை காலாண்டுக்கு ஒருமுறை தீவிரமாக கண்காணிக்க தனி அமைப்பை ஏற்படுத்தவும் எஸ்.ஐ.டி பரிந்துரை செய்துள்ளது.
வருமான வரித்துறையில் நிலுவையில் உள்ள 5 ஆயிரம் வழக்குகளை விசாரிக்க மும்பையில் கூடுதலாக 5 நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனவும் எஸ்.ஐ.டி கூறியுள்ளது.