ஹாங்காங், டிசம்பர் 13 – ஹாங்காங்கில் ஜனநாயகத்திற்காக வலுவான போராட்டத்தை முன் வைத்த போராட்டக்காரர்களின் முகாம்களைக் கலைக்க ஹாங்காங் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் அவர்களின் முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
இதன் மூலம் அவர்கள் போராட்டம் தற்காலிகமாக முடிவிற்கு வந்துள்ளது. 1997 ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல், இங்கிலாந்திடம் இருந்து சீனாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் ஹாங்காங் வந்தது.
சீனாவிலும், ஹாங்காங்கிலும் பல ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும், சீனா, ஹாங்காங் ஜனநாயகத்தில் செலுத்தும் தனது ஆதிக்கத்தை மட்டும் மாறவில்லை.
2017-ம் ஆண்டு, ஹாங்காங்கில் புதிய ஆட்சியாளரை தேர்வு செய்ய தேர்தல் நடத்துவதாக சீனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. ஆனால் யார் வேட்பாளர் என்பதை தாங்கள்தான் முடிவு செய்வோம் என்றும் கூறியது. இது ஹாங்காங்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மாணவர்கள், பொதுமக்கள் ஓரணியில் திரண்டு, அரசு நிர்வாகத்தின் தலைமையகமாக செயல்பட்டு வருகிற அட்மிரால்டியில் சாலைகளை முற்றுகையிட்டு, முகாம்கள் அமைத்து,முழுமையான ஜனநாயக உரிமைகள் வழங்கக்கோரி 3 மாத காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த போராட்டங்கள் சட்டவிரோதமானவை என சீனா அறிவித்தது.அவ்வப்போது போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
கடந்த 2 மாதங்களில் 655 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 129 அதிகாரிகள் காயம் அடைந்தனர். இந்தப் போராட்டம், சீனாவுக்கு சவாலாக அமைந்தது.
இந்த நிலையில் போராட்டத்துக்கு எதிராக ஹாங்காங் உயர்நீதிமன்றத்தில் ஒரு பேருந்து நிறுவனம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அட்மிரால்டியில் போராட்டக்காரர்களையும், அவர்களது முகாம்களையும் 3 நாளில் கலைக்குமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்களின் முகாம்கள் கலைக்கப்பட்டன. இதனைக் கண்ட அவர்களில் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். எனினும், பலர் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக போராட்டம் வேறு வடிவங்களில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.