பெஷாவார், டிசம்பர் 16 – சிட்னி கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்து உலகம் சற்று பெருமூச்சு விட்ட அடுத்த நாளே, பெஷாவாரில் உள்ள இராணுவப் பள்ளியில் இன்று நடத்தப்பட்ட தலிபான்களின் மனித வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 124 பேர் பள்ளிக் குழந்தைகளாவர். 245 பேர் இந்த சம்பவத்தில் படு காயமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் 6 பயங்கரவாதிகளும் அடங்குவர்.
மீட்புப் படையினர் தாக்குதலில் மரணமடைந்தவர்களை அப்புறப்படுத்தும் காட்சி. பாகிஸ்தானின் வட மேற்கு நகரான பெஷாவாரில் உள்ள இராணுவப் பள்ளியொன்றில் தலிபான்கள் நடத்திய கொடூரமானத் தாக்குதலில் இதுவரை 134 பேர் பலியாகியுள்ளனர்.
பள்ளியின் உள்ளே பலரை பயங்கரவாதிகள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.
பாகிஸ்தான் அதிரடிப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பள்ளியின் உள்ளே கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் நடைபெற்று வருவதாகவும், அந்த இடத்தை இராணுவம் முற்றுகையிட்டுள்ளதாகவும், வானத்தில் ஹெலிகாப்டர்கள் அதிகமாகப் பறப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவம் எங்களை அடிக்கடி தாக்கி வருவதால் எங்களுக்கு ஏற்படும் இழப்பு எத்தகையது என்பதை இராணுவத்தினரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அவர்களும் அந்த வலியை அனுபவிக்க வேண்டுமெனக் காட்டுவதற்காகவும் தாங்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
பள்ளியின் உள்ளே சிக்கிக் கொண்டிருக்கும் தங்களின் குழந்தைகளின் நிலைமை குறித்து இராணுவத்தினரிடம் விசாரிக்கும் தம்பதிகள்.
பாகிஸ்தானின் ஹைதராபாத் நகரில் உள்ள பள்ளியொன்றில் தலிபான் தாக்குதலில் மரணமடைந்தவர்களுக்காக பிரார்த்தனை நடத்தப்பட்ட காட்சி.
படங்கள்: EPA