கோலாலம்பூர், டிசம்பர் 17 – மஇகாவில் மறுதேர்தல் என்று ஒன்று நடந்தால் அது அக்கட்சியின் அனைத்து நிலைகளிலும் நடைபெறும் என்று டத்தோஸ்ரீ பழனிவேல் தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள மத்திய செயலவைக் கூட்டத்தில், மறுதேர்தல் தொடர்பாக சங்கப் பதிவிலாகா பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“எனினும் மறுதேர்தல் நடத்தலாம் என மத்திய செயலவை முடிவெடுக்கும் பட்சத்தில், அத்தேர்தல் கட்சியின் அனைத்து நிலைகளிலும் நடத்தப்படும்,” என்றார் பழனிவேல்.
இதன் மூலம் கட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டி இருப்பதாகக் கருதப்படுகிறது.
“பெரும்பாலான தொகுதித் தலைவர்கள் மற்றும் பேராளர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கட்சி தற்போது நல்லவர்களின் கைகளில் உள்ளது. கட்சியின் சட்டப் பிரிவுகளில் சில மாற்றங்களை செய்யவுள்ளோம்,” என்று பழனிவேல் மேலும் தெரிவித்தார்.
எனினும் எத்தகைய சட்ட மாற்றங்கள் செய்யப்படும் என்று அவர் கூறவில்லை. இத்தகைய சூழ்நிலையில், கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை 18ஆம் தேதி நடைபெற உள்ளது.