Home உலகம் டெல்லி-சென்னை புல்லட் ரயில் திட்டம்: இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு சீனாவில் பயிற்சி!

டெல்லி-சென்னை புல்லட் ரயில் திட்டம்: இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு சீனாவில் பயிற்சி!

583
0
SHARE
Ad

bullet trainபெய்ஜிங், டிசம்பர் 17 – டெல்லி-சென்னை இடையே புல்லட் ரயில் அமைப்பது தொடர்பான திட்டத்திற்கு இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு சீனாவில் சிறப்பு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மற்றும் குவாங்ஸோ மாகாணத்திற்கு இடையே அதி நவீன புல்லட் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இருப்புப் பாதையின் மொத்த நீளம் 2,298 கி.மீ ஆகும்.

மணிக்கு சுமார் 300 கி.மீ வேகத்தில் ஓடும் இந்த புல்லட் ரயில்கள், இப்பாதையின் ஒட்டுமொத்த தூரத்தையும் 8 மணி நேரங்களுக்குள் கடந்து விடுவதால், உலகிலேயே மிகவும் நீளமான புல்லட் ரயில் சேவையாக இது கருதப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்தியாவின் பிற பகுதிகளையும் இத்தகையை அதிநவீன மற்றும் அதிவேக புல்லட் ரயில்களின் மூலம் இணைக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்த சீனப் பிரதமர் ஜிங்பிங்கிடம், தன்னுடைய விருப்பத்தை அவர் தெரிவித்தார். அப்போது, இரு நாடுகளுக்கிடையே ரயில்வே ஒத்துழைப்பு தொடர்பான புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனையடுத்து, சென்னை-டெல்லி இடையிலான 1,754 கி.மீ தூரத்தை புல்லட் ரயில் சேவை மூலம் இணைக்க திட்டமிடப்பட்டது. சென்னை-டெல்லி புல்லட் ரயில் திட்டத்திற்கு சுமார் 32.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய ரயில்வே துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகளுக்கு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இதற்கான முதற்கட்ட பயிற்சிகள் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புல்லட் ரயில் பாதைக்கான கட்டமைப்பு பணிகள், இயக்கம், பராமரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அந்நாட்டு ரயில்வே உயரதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

பயிற்சியின் முதற்கட்டமாக சுமார் 22 இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கான ஹெவி ஹால் தொழில்நுட்ப பயிற்சி பெய்ஜிங்கில் உள்ள ஜியோதாங் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் தொடங்கியது. வரும் நாட்களில் மற்ற இந்திய அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.