Home நாடு நாளை கூடும் மத்திய செயலவை சட்ட ரீதியில் செல்லாது – மஇகா ஒரு பிரிவினர் எதிர்ப்பு

நாளை கூடும் மத்திய செயலவை சட்ட ரீதியில் செல்லாது – மஇகா ஒரு பிரிவினர் எதிர்ப்பு

497
0
SHARE
Ad

MIC Logo and Flagகோலாலம்பூர், டிசம்பர் 17 – மஇகா தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் வியாழக்கிழமை அன்று மத்திய செயலவை கூட்டத்தை கூட்டியுள்ள வேளையில், சட்ட ரீதியில் இக்கூட்டம் செல்லுபடியாகாது என்று கட்சிக்குள் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி நடைபெற்ற மஇகா தேர்தல் முடிவுகள் இரத்து செய்யப்படுவதாக சங்கங்களின் பதிவதிகாரி உத்தரவிட்டுள்ள நிலையில், அத்தேர்தல் வழி தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு எவ்வாறு மத்திய செயலவைக் கூட்டத்தை நடத்த முடியும்? என மஇகாவில் ஒரு பிரிவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் மத்திய செயலவைக் கூட்டம் நடக்கும்போது அதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக மஇகா இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் டத்தோ டி.மோகன் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் மஇகா தலைமையகம் முன்பு கூடுமாறு தமது ஆதரவாளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே, மஇகாவில் தற்போது சட்டப்படி முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றால் அது கட்சித் தலைவர் பழனிவேல் மற்றும் துணைத்தலைவர் டாக்டர் சுப்ரமணியம் ஆகிய இருவர் மட்டுமே என்கிறார் சங்கங்களின் பதிவிலாகா சட்டங்கள் குறித்து நன்கறிந்த வழக்கறிஞர் ஒருவர்.

“சங்கப் பதிவதிகாரியின் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு இருவரும் உள்துறை அமைச்சரிடம் முறையிடலாம். உள்துறை அமைச்சர் மூலமாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ சங்கப் பதிவதிகாரியின் உத்தரவை மாற்றும் வரை அவர் பிறப்பித்துள்ள உத்தரவு செல்லுபடியாகும். எனவே அதிகாரப்பூர்வமாகவோ அல்லது சட்டப்பூர்வமாகவோ மத்திய செயலவைக் கூட்டத்தை அவர்களால் கூட்ட முடியாது.

“கடந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்களுடன் ஒரு சந்திப்பு கூட்டத்தை நடத்தலாமே தவிர, அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு சட்ட ரீதியில் எந்த மதிப்பும் கிடையாது,” என்று அந்த வழக்கறிஞர் மேலும் தெரிவித்தார். எந்த மத்திய செயலவைக்கு அதிகாரம் உள்ளது? மஇகாவின் சட்டப் பிரிவு எண் 47இன் படி தேர்வு செய்யப்பட்ட மத்திய செயலவை நிர்வாகிகள் 3 ஆண்டு காலம் அப்பதவியை வகிப்பவர். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அல்லது மறுதேர்தல் நடைபெறும் வரை அப்பதவியில் அவர்கள் நீடிக்கலாம் என்கின்றன கட்சியின் சட்டவிதிமுறைகள்.

கடந்த 2009ஆம் ஆண்டில் மஇகா உதவித் தலைவர்கள் மற்றும் மத்திய செயலவைக்கான தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து 2012ஆம் ஆண்டு அடுத்த தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். எனினும் அச்சமயம் 13ஆவது பொதுத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால், மஇகா தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர் 2013ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்றது.

இந்நிலையில் சங்கப் பதிவதிகாரியின் உத்தரவு காரணமாக, கடந்தாண்டு தேர்தல் நடைபெறுவதற்கு முன்பிருந்த மத்திய செயலவை உறுப்பினர்களும், உதவித் தலைவர்களும் தன்னால் மீண்டும் அப்பதவிக்கு உரியவர்களாகின்றனர். எனவே அடுத்து தேர்தல் நடைபெறும் வரை இவர்கள் அப்பதவிகளில் நீடிப்பர். தற்போதைய பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளர் தேர்வு செல்லுபடியாகுமா? தற்போதைய சூழ்நிலையில் மஇகாவின் நடப்பு பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளர் நியமனமும் கேள்விக்குறியதாகியுள்ளது.

தேர்தல் வழி தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவை உறப்பினர்களிலிருந்து பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளரை கட்சியின் தலைவர் தேர்வு செய்யலாம் என்று மஇகா சட்ட விதிமுறைகள் தெரிவிக்கின்றன. மேலும் 9 மத்திய செயலவை உறுப்பினர்களை நியமிக்கவும் தலைவருக்கு அதிகாரம் உள்ளதாக அச்சட்டங்கள் கூறுகின்றன.

“கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலின் வழி மத்திய செயலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் பிரகாஷ் ராவ். ஆனால் அத்தேர்தல் முடிவுகள் இனி செல்லாது என சங்கப் பதிவதிகாரி உத்தரவிட்டுள்ள நிலையில், பிரகாஷ் ராவ் இனிமேலும் மத்திய செயலவை உறுப்பினராக கருதப்பட இயலாது. எனவே அவரை கட்சித் தலைவருக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் மத்திய செயலவை உறுப்பினராக பழனிவேல் நியமிக்க வேண்டும். அதன் பிறகே பிரகாஷ் ராவ் பொதுச் செயலாளராக தொடர்ந்து சட்டப்படி செயல்பட முடியும்,” என்கின்றன விவரமறிந்த மஇகா வட்டாரங்கள்.

தற்போதைய சூழலில், கட்சி சட்டங்கள் அளித்துள்ள தனது அதிகாரத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள 9 மத்திய செயலவை உறுப்பினர்கள் யார் யார்? என்பதை பழனிவேலு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. ஆனால் கடந்த 2009 மற்றும் 2013- ல் நடந்த இரு தேர்தல்கள் வழி தேர்ந்தெடுக்கப்பட்ட இரு மத்திய செயலவைகளில் எது சட்டப்படி செல்லுபடி ஆகும் என்பதையும் அவர் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டியிருக்கும்.

டத்தோ முருகேசனைப் பொறுத்தவரையில் அவர் பொருளாளராக நியமிக்கப்பட்டது செல்லுபடியாகிறது. ஏனெனில் கடந்த 2009ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட மத்திய செயலவையிலும் அவர் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. “தற்போது நிலவும் சட்ட ரீதியான பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், துணைத்தலைவர் டாக்டர் சுப்ரமணியத்துடன் கலந்தாலோசித்து, உள்துறை அமைச்சரிடம் மேல்முறையீட்டு மனுவை சமர்ப்பிப்பதே பழனிவேலு முன் உள்ள சிறந்த, பாதுகாப்பான வழி. அல்லது சங்கப் பதிவதிகாரி உத்தரவை ஏற்று மறு தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும். மாறாக கடந்தாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையின் அதிகாரத்துவ கூட்டத்தை அவர் கூட்டினால் மேலும் பல சிக்கல்களையே சந்திக்க நேரிடும்,” என்று மஇகா வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.