கொழும்பு, டிசம்பர் 17 – எதிர்வரும் ஜனவரியில் நடைபெறவிருக்கும் இலங்கை அதிபர் தேர்தலின்போது பயங்கர கலவரம் வெடிக்கலாம் என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அச்சம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வருகின்ற ஜனவரி 8 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தற்போதைய அதிபர் ராஜபக்சே மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில், எதிர்க் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக மைத்திரி பால சிறீசேனா நிறுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் அதிபர் சந்திரிகா, மைத்திரி பாலா சிறீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக சந்திரிகா செய்தியாளர்களிடம் கூறும்போது, ”எதிர்க் கட்சி வேட்பாளரை தோற்கடிக்கும் வகையில் தேர்தல் நாளில் பயங்கர கலவரத்தை ஏற்படுத்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். 2010 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போதும் எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்தினார்கள். அதேபோன்று இப்போதும் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
“தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டுமென்றால், அனைத்துலக பார்வையாளர் குழு தேர்தலை நேரடியாக கண்காணிக்க வேண்டும். ஆனால், அதற்கு ராஜபக்சே இடம் தரமாட்டார். நேர்மையான முறையில் தேர்தல் நடக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் ராஜபக்சே அதை கண்டுகொள்ளவில்லை. அதனால், தேர்தல் உண்மையாக நடைபெறுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது” என்றும் சந்திரிகா கூறியுள்ளார்.