மாஸ்கா, டிசம்பர் 19 – ரஷ்யாவில் ஐபோன், ஐபேட் மற்றும் கணினிகளை இணையம் மூலம் விற்பனை செய்யப்படுவதை ஆப்பிள் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ரஷ்யாவில் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் அந்நாட்டு நாணய மதிப்பான ரூபிள் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மேலும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஆப்பிள் தனது தயாரிப்புகளுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ரஷ்யாவில் இணையம் மூலம் தனது தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இது குறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்யாவில் ரூபிள் மதிப்பின் சரிவால் எங்கள் இணைய வர்த்தகம் தடைபட்டுள்ளது. இதில் வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. கடந்த வாரத்தில் மட்டும் ரூபிள் மாதிப்பு, அமெரிக்க டாலரை ஒப்பிடுகையில் 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.”
“ரூபிள் மதிப்பின் அதீத ஏற்ற இறக்கங்கள் காரணமாக, எங்கள் தயாரிப்புகளின் விலைகளை மறுமதிப்பீடு செய்து வருகின்றோம். இதற்காக ரஷ்ய வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய வர்த்தகர்கள் கூறுகையில், “மின்சாதனப் பொருட்கள் முதல் மதுபானம் வரை விலை நிர்ணயம் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.