புது டெல்லி, டிசம்பர் 25 – ஆப்பிள் நிறுவனத்தின் திறன்பேசி வழி கட்டணம் செலுத்தும் முறையான ‘ஆப்பிள் பே’ (Apple Pay) விரைவில் இந்தியாவில் செயல்படுத்தப்பட இருப்பதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.
விரல் நுனியில் ஒரே அழுத்தத்தில் பயனர்கள், தேவையான கட்டணத் தொகையை செலுத்துவதற்கு ஆப்பிள் உருவாக்கிய சேவை முறைதான் ஆப்பிள் பே. அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை, வங்கி அட்டைகளின் செயல்பாடுகளை முற்றிலும் ஒழித்துவிட்டன.
அமெரிக்காவின் பெரும்பாலான வங்கிகள் இந்த சேவையை ஏற்றுக்கொண்ட நிலையில், இதன் தாக்கத்தை இந்தியா, ஐரோப்பா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் பரப்ப ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது பற்றிய தகவல்களை ஆப்பிள் செய்திகள் மற்றும் ஆருடங்களை வெளியிடும் 9To5Mac இணைய தளம் வெளியிட்டுள்ளது.
ஆப்பிளுக்கு கடந்த வருடங்களில் இந்திய சந்தைகள் பெரிய அளவிலான வர்த்தகத்தை தந்ததில்லை. எனினும், எதிர் வரும் காலங்களில் இந்திய வர்த்தகம் ஆப்பிளுக்கு பெரிய அளவில் கைகொடுக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதன் காரணமாக ஆப்பிள், அடுத்த சில வருடங்களில் 500 ஆப்பிள் வணிக மையங்களை திறக்க முடிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து தான், தனது ஆப்பிள் பே சேவை முறையை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக தொழில்நுட்ப இணைய தளங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
எனினும், ஒருங்கிணைந்த வர்த்தக முறைகளைக் கொண்டுள்ள அமெரிக்காவில் இந்த முறை சாத்தியப்பட்டாலும், இந்தியாவில் இதனை ஆப்பிள் எப்படி செயல்படுத்த முடியும் என்ற எதிர்பார்ப்பும் வர்த்தகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.