Home அவசியம் படிக்க வேண்டியவை முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அமரர் மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அமரர் மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

1472
0
SHARE
Ad

vajpayeeபுதுடெல்லி, டிசம்பர் 25 – முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (படம்) மற்றும் கல்வியாளர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது.

இதையடுத்து வாஜ்பாய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாகவே பாஜக வலியுறுத்தி வந்தது. எனினும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இக்கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. மாறாக பாரத ரத்னா விருதை வழங்குவதற்கான விதிமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இவ்விருதை வழங்கி கௌரவித்தது.

#TamilSchoolmychoice

இதனால் பாஜக தரப்பு கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இதையடுத்து காட்சிகளும் மாறியுள்ளன.

அனைவரும் எதிர்பார்த்தது போலவே வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது 90 வயதில் பாரத ரத்னா விருது வழங்கப்படுகின்றது.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் இருமுறை பிரதமராக இருந்தவர். மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Madan Mohan Malaviya
அமரர் மதன் மோகன் மாளவியா

இதேபோல், கல்வியாளர் மதன் மோகன் மாளவியாவுக்கும் பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாரண இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியா, சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாரணாசி எனப்படும் காசியில் உள்ள இந்து பல்கலைக் கழகத்தை நிறுவியவர் மாளவியா. இந்த ஆண்டு அவரது 153வது பிறந்த வருடமாகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில்தான் இந்த இந்துப் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது என்பதும், கடந்த இந்தியப் பொதுத் தேர்தலில்  மோடி வாரணாசியில் போட்டியிட்டபோது, அவரது வேட்பு மனுவை முன்மொழிந்தவர் மதன் மோகன் மாளவியாவின் பேரன் கிரிதர் மாளவியா என்பதும் இந்த சமயத்தில் நினைவுகூரப்பட வேண்டிய அம்சங்களாகும்.

மாளவியாவுக்கு வழங்கப்படும் விருது கட்சிப் பிரிவினைகளைத் தாண்டி வழங்கப்படுகின்றது என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். காரணம் மாளவியா 1909ஆம் ஆண்டு முதல் 1918ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தவர்.

பாரத ரத்னா விருது:

‘இந்திய ரத்தினம்’ என்று பொருள்படும் பாரத ரத்னா விருது இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். சிறந்த தேசிய சேவை ஆற்றியதற்காக வழங்கப்படும் இந்த விருது கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் சேவை புரிந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2011 ம் ஆண்டு அதன் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அந்த வகையில் கிரிக்கெட்டில் சாதனை புரிந்தமைக்காக சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த ஆண்டு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்குப் பின்னரே அந்த விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.