கோத்தபாரு, டிசம்பர் 22 – கிளந்தான் வெள்ளப்பெருக்கு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அப்புறப்படுத்தப்பட்டு 84 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மொத்தம் 6,933 குடும்பங்களைச் சேர்ந்த 21,328 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக மாநில அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இந்த எண்ணிக்கை 19,186 ஆக இருந்தது.
மிக அதிக பட்சமாக பாசீர் மாஸ் பகுதியில் 12,008 பேர் 35 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தும்பாட் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,861இல் இருந்து 5,229 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள சுங்கை கோலோக் அணையில் அபாய அளவையும் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
மழை தொடர்ந்து நீடிப்பதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே கோல கிராய் பகுதியில் உள்ள 8 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 2,452 பேரில் சுமார் 500 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை எந்த முக்கிய சாலையும் மூடப்படவில்லை. டிசம்பர் 16ஆம் தேதி முதல் பெருக்கெடுத்துள்ள வெள்ளம் காரணமாக இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.
வெள்ளப் பெருக்கை முன்னிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிப்பு வெளியானால் அதை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், குழந்தைகளை வெள்ள நீரில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என்றும் கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இயக்குநர் அஸ்மி ஓஸ்மான் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே திரங்கானுவில் வெள்ளம் வடியத் தொடங்கியிருப்பதால், அங்குள்ள 100 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 7,508 பேரில் 860 பேர் வீடு திரும்பியுள்ளனர்.