கோலாலம்பூர், டிசம்பர் 22 – மஇகாவில் உள்ள பெரும்பாலான கிளைத் தலைவர்களும் அனைத்து மாநிலத் தலைவர்களும் தம்மை ஆதரிப்பதாக டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் (படம்) தெரிவித்துள்ளார்.
வழக்கமாக கட்சி விவகாரங்களில் மௌனம் காத்து வரும் பழனிவேல், அண்மையக் காலமாக, கட்சியில் எழுந்துள்ள கொந்தளிப்பு, சங்கப் பதிவக உத்தரவு தொடர்பான பிரச்சனைகள் காரணமாக கடந்த சில நாட்களாக பத்திரிக்கைகளுக்கு தொடர்ந்து பேட்டிகளை வழங்கி வருகின்றார்.
நேற்றைய ஸ்டார் ஆங்கில நாளிதழுக்கு வழங்கியுள்ள பேட்டி ஒன்றில் மஇகா வலுவாக உள்ளது என்றும், அண்மையில் நடத்தப்பட்ட செயற்குழு கூட்டத்திற்கு வந்த ஆயிரத்திற்கும் அதிகமான கட்சி நிர்வாகிகள் தங்களது ஆதரவை தம்மிடம் புலப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
“அன்றைய கூட்டத்தின் போது சிறு குழுவினர் மட்டுமே கூச்சலிட்டுக் கொண்டும் ரவுடித்தனத்திலும் ஈடுபட்டனர். அந்த அராஜகப் பேர்வழிகள் யார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் எங்களை உசுப்பேற்றி தூண்டிவிடப் பார்த்தனர். ஆனால் எனது ஆதரவாளர்கள் பதிலடி கொடுக்க நினைத்தாலும் அமைதி காத்தனர்,” என்று பழனிவேல் தெரிவித்துள்ளார்.
கட்சியில் கீழ்நிலையில் உள்ள சிலரே தன்னை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க முடியாது என்றார்.
“அந்த சிறு குழுவினர் தான் என்னை பதவி விலகுமாறு கூறுகிறார்கள். நான் எதற்காக விலக வேண்டும்? அக்குழுவில் உள்ளவர்கள் உயர் தலைமைப் பொறுப்புகளில் இல்லை. கட்சியின் கீழ்மட்டத்தில் உள்ளனர். இது பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. அன்றைய தினம் நான் என் காரை நோக்கிச் சென்றபோது கூட எவரும் என்னை நெருங்கவில்லை. நான் என் போக்கில் கிளம்பிச் சென்றேன்,” என்று பழனிவேல் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு மலாக்காவில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களே தற்போது கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவின் செயல்பாட்டுக்கும் தமது செயல்பாட்டுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தாம் மஇகாவினருக்கு நல்ல முன்னுதாரணமாக இருப்பதாகவும் பழனிவேல் கூறியுள்ளார்.
“அவரது (சாமிவேலு) பாணி வேறு, என்னுடைய செயல்பாடு வேறு மாதிரியானது. நான் ஜோகூர் முதல் கெடா வரை கட்சியின் அடிமட்டத்தில் உள்ளவர்களுடன் இணைந்து செயல்படுகிறேன். நான் பிரச்சினைகள் ஏற்படுத்துவதில்லை. கட்சியின் அடிமட்டத்தை வலுவாக்கி வருகிறேன்,” என்று பழனிவேல் தம் பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.