கோலாலம்பூர், டிசம்பர் 23 – பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்க வங்கிகள், கடன் மற்றும் பற்று அட்டைகளை அறிமுகப்படுத்தின. அதனை மேலும், எளிதாக்க உருவாக்கப்பட்டவை தான் ‘மைக்ரோ டேக்’ (Micro Tag) அதாவது நுண் பின்னிணைப்பு.
நாம் நமது பணத் தேவைகளுக்காக எடுத்துச் செல்லும் கடன் மற்றும் பற்று அட்டைகளின் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க உருவாக்கப்பட்ட இந்த புதிய வசதியை மலாயன் வங்கி (மே பேங்க்) மலேசியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது.
சிறிய மின்னணு ஒட்டுத்தாள் (ஸ்டிக்கர்) கொண்ட இந்த மைக்ரோ டேக்கை, நமது செல்பேசிகளிலோ அல்லது கார் சாவிகளிலோ பொருத்திக்கொள்ள முடியும். இந்த மைக்ரோ டேக்கானது ‘விசா பேவேவ்’ (Visa payWave) கடன் அட்டைகளுடன் தொடர்பில் இருக்கும். குறிப்பிட்ட அந்த மைக்ரோ டேக்கை, விசா பே வேவ் முனையத்தில் அசைக்கும் பொழுது நமது பணப் பரிமாற்றங்கள் தானாகவே தானியங்கி முறையில் நடைபெறும்.
மலேசியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தபட்டுள்ள இந்த மைக்ரோ டேக் வசதி குறித்து, மலாயன் வங்கியின் உயர் அதிகாரி பி.ரவீந்திரன் கூறுகையில், “மைக்ரோ டேக், பணம் செலுத்தும் முறைகளில் புதுமையான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் பயனர்களின் பணப்பரிவர்த்தனைகள் மேலும் எளிதாக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
வரும் 2015-ம் ஆண்டிற்குள் மூவாயிரத்திற்கும் அதிகமான விசா பே வேவ் முனையங்களை மலேசியாவில் அமைக்க மலாயன் வங்கி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.