ப்யாங்யாங், டிசம்பர் 23 – சோனி நிறுவனம் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில் எங்கள் நாட்டின் மீது தொடர் குற்றசாட்டுகளை சுமத்தினால் வெள்ளை மாளிகை தாக்கப்படும் என வடக்கொரியா, அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சோனி நிறுவனத்தின் தரவு தளம் மற்றும் சர்வர்களை தகவல் திருடர்கள் தாக்கி, முக்கிய தகவல்கள் மற்றும் தரவுகளை திருடினர்.
மேலும், சோனி நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களின் கதைகளையும் வெளியிட்டனர். இதனால் சோனி நிறுவனம் ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ பிரதிபலிக்கும் கதாபாத்திரம் கொண்ட ’தி இன்டர்வியு’ என்கிற திரைப்படத்தை சோனி நிறுவனம் வெளியிட இருந்ததால், அந்நிறுவனம் தகவல் திருடர்களால் முடக்கப்பட்டதாகவும், இதனை வட கொரியா செய்திருப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகொரியா, இந்த தாக்குதலை நடத்தி இருந்தால், அந்நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அந்நாடு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா,
“இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா குற்றம் சாட்டி வருகின்றது. இதே நிலை நீடித்தால் வெள்ளை மாளிகை, பெண்டகன் உள்ளிட்ட இடங்கள் தாக்குதலுக்குள்ளாகும்” என்று எச்சரிகை விடுத்துள்ளது.