கோலாலம்பூர், டிசம்பர் 26 – ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தங்களின் இல்லங்களில் இருந்து துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ள வேளையில் இதுவரையில் 5 பேர் வெள்ளத்தின் தீவிரத்திற்கு பலியாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் விடுமுறையில் இருக்கும் பிரதமர் நஜிப், தனது விடுமுறையை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்புகின்றார்.
கடந்த புதன்கிழமை, அமெரிக்காவின் ஹவாய் தீவில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கும் நஜிப், அங்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் கோல்ப் விளையாடிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி, நட்பு ஊடகங்கள் மூலம் சுழல் முறையில் வெகுவிரைவாக பரவத் தொடங்கின.
நாடே, வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும்போது பிரதமர் சொகுசு விடுமுறையில் இருக்கின்றார் என்பது போன்ற வாசகங்களோடு நட்பு ஊடகங்களில் பலர் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்தே பிரதமர் நாடு திரும்புகின்றார். நாளை வெள்ள நிலைமையைப் பார்வையிட நேரடியாக, மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கிளந்தான் மாநிலத்திற்கு வருகை தரவிருக்கின்றார்.
தனது முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் செய்துள்ள பதிவில் “நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து நான் கவலை கொண்டுள்ளேன். நிலைமையை நேரடியாகக் கண்டறிந்து கொள்ள நாடு திரும்புகின்றேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நோக்கியே இருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன் 2008ஆம் ஆண்டில் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் புகுந்த வேளையில், இந்த தடவை அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105,000 ஐத் தாண்டியுள்ளது.
மரணமடைந்த 5 பேரில் ஒரு கைக்குழந்தையும் அடங்கும். அந்தக் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு அந்தத் தாய் துயர் துடைப்பு மையத்தை நோக்கி, வெள்ளத்தைக் கடக்க முற்பட்டபோது, அந்தக் குழந்தை தவறி விழுந்து பரிதாபமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
இதற்கிடையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “நான் வெளிநாட்டில் இருந்தாலும், வெள்ளம் தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட அரசாங்க இலாகாக்களுடன் தொடர்ந்து கண்டறிந்து வந்தேன். அவர்களும் வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்தவும், நிவாரணப் பணிகள் அனைத்தையும் வழங்கி வருவதாகவும் உறுதிப்படுத்தியிருந்தனர்” என்றும் பிரதமர் நஜிப் கூறியிருக்கின்றார்.