Home கலை உலகம் நினைவஞ்சலி: கே.பாலசந்தர் – தமிழ் சினிமாவின் போக்கைப் புரட்டிப் போட்டு புதுப் பாதை வகுத்த பிதாமகர்!

நினைவஞ்சலி: கே.பாலசந்தர் – தமிழ் சினிமாவின் போக்கைப் புரட்டிப் போட்டு புதுப் பாதை வகுத்த பிதாமகர்!

731
0
SHARE
Ad

K.-BALACHANDERடிசம்பர் 26 – நேற்று, நல்லடக்கம் செய்யப்பட்ட இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மறைவு, ஒரு மாபெரும் சகாப்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

தமிழ் சினிமாவில், முத்திரை பதித்த இயக்குநர்கள், வெற்றி விழா கண்ட திரைப்படங்கள் தந்தவர்கள், புதுமையான படைப்புகளை வழங்கியவர்கள் என நூற்றுக் கணக்கான இயக்குநர்கள் உலா வந்திருக்கின்றார்கள்.

ஆனால், ஏறத்தாழ 50 ஆண்டுகாலமாக, தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாக, எத்தனையோ புதுமையான படைப்புகளை ஒரு புறம் வழங்கிக்கொண்டும், இன்னொரு புறத்தில் எண்ணிலடங்கா திரை நட்சத்திரங்களைக் கண்டெடுத்து அறிமுகப்படுத்தியும் இந்த அளவுக்கு சாதனை படைத்தவர் – பாலசந்தருக்கு நிகரான இன்னொருவர் இல்லை என்பதுதான் உண்மை நிலை.

KB last rites procession 2
கே.பாலசந்தரின் இறுதி ஊர்வலம்
#TamilSchoolmychoice

ஏறத்தாழ 100 பன்மொழித் திரைப்படங்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என தனது பன்முகத் திறனை வெளிப்படுத்தியவர் பாலசந்தர்.

இயக்குநர்களுக்கென்று தனி  அந்தஸ்தும், மரியாதையும் கிடைப்பதற்கு வழி அமைத்துத் தந்தவர் ஸ்ரீதர்தான் என்பது அனைவருக்கும் ஒப்புக் கொண்டதுதான்.

ஆனால், இடைவிடாத புதிய முயற்சிகளின் வழி, உச்ச நட்சத்திரத்திரங்களின் உதவி இல்லாமல்,  ஸ்ரீதருக்குப் பிறகு, இயக்குநர்களுக்கென தனிக் கௌரவத்தை ஏற்படுத்தி, தமிழ்த் திரையுலகின் இன்னொரு பாதையை திறந்து காட்டிய – மாற்றிப் போட்ட பெருமையும்,  பாலசந்தருக்கே உரியது.

KB with Rajni and Kamalநாடக உலகிலிருந்து வந்து வெற்றிக் கொடி நாட்டியது மட்டுமின்றி, தன்னைப் போன்று எத்தனையோ நாடகக் கலைஞர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். நட்சத்திரங்கள் பின்னால் இயக்குநர்கள் அலையும் நிலைமையை மாற்றி, அவரே புதிய, புதிய நட்சத்திரங்களை உருவாக்கினார்.

அதுவும், எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்ற உச்ச நட்சத்திரங்கள் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த கால கட்டத்தில், அவர்களுக்குப் பின்னால் செல்லாமல், வித்தியாசமான கதையம்சம், புதுமையான நடிப்பைக் கொண்ட புதுமுகங்கள் என – எளிமையான கறுப்பு வெள்ளைப் படங்களை உருவாக்கி, அதில் மாபெரும் வெற்றியும் கண்டவர் அவர்.

முற்றிலும் புதிய முகங்களைக் கொண்டு கதையம்சத்தோடு அவர் உருவாக்கிய சாதாரண கறுப்பு வெள்ளைப் படமான அவள் ஒரு தொடர்கதை நமது கோலாலம்பூரிலேயே 60 நாட்களுக்கு அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிய வரலாற்றை இந்நேரத்தில் நினைவு கூர்வது பொருத்தம்.

நட்சத்திரங்களை உருவாக்கியவர்

Ethir Neechal movie posterஇருப்பினும், நட்சத்திரங்களை ஒரேயடியாக ஒதுக்காமல், சிவாஜியோடு ‘எதிரொலி’ படத்தில் மட்டும் கைகோர்த்தவர், ஜெமினியோடு, நான் அவனில்லை, புன்னகை மன்னன், வெள்ளிவிழா, காவியத் தலைவி என பல படங்களில் இணைந்தார்.

ஜெய்சங்கரை வைத்து நூற்றுக்கு நூறு, நான்கு சுவர்கள் படங்களை இயக்கியவர், ரவிச்சந்திரனோடு நான்கு சுவர்கள் படத்தில் பணியாற்றினார்.

குறிப்பாக, நாகேஷூம் பாலசந்தரும் இணைந்து தந்த காவியங்கள் மறக்க முடியாதவை மட்டுமல்ல, நாகேஷ் என்ற பன்முகத் திறன் கொண்ட நடிகனின் உள்ளுக்குள் புதைந்திருந்த வித்தியாச நடிப்பாற்றலை வெளிக் கொணர்ந்தவையாகும்.

நாகேஷை கதாநாயகனாக வைத்து வரிசையாக பல படங்கள் தந்த துணிச்சல், அதிலும் அவற்றை வெற்றிப் படங்களாக்கிய மேதாவித்தனம், பாலசந்தருக்கே உரியது.

சினிமாவின் இன்றைய முன்னணிக் கதாநாயகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகிய இருவரின் உருவாக்கத்திலும், உயர்விலும் பெரும்பங்கு வகித்தவர்.

இயக்குநர்களையும் உருவாக்கியவர்

இவர்களைத் தவிர, நகைச்சுவை நடிகர் விவேக்கை அடையாளம் கண்டவரும் இவர்தான். வசந்த், சுரேஷ் கிருஷ்ணா, சரண் போன்ற பல முன்னணி இயக்குநர்கள் இவரது பயிற்சிப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டு வெளியேறியவர்கள்.

Homage to KB - Director Vasanth
தனது குரு பாலசந்தருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் இயக்குநர் வசந்த் (வெள்ளை சட்டை – தாடியுடன்)

தமிழ்ப்படங்கள் மட்டும் என்றில்லாமல், தெலுங்குக்கு ஒரு ‘மரோ சரித்ரா’, இந்திக்கு ஒரு ‘ஏக் துஜே கேலியே’ என மற்ற மொழிகளிலும் வெற்றிப் படங்களை உருவாக்கிக் காட்டியவர்

புராண, இலக்கிய, சரித்திர நாடகங்கள்தான் தமிழ்ப் படங்களின் ஆரம்ப கால உருவாக்கத்திற்கான ஆதாரம், அடிப்படை என்றாலும், பின்னர் தமிழ்ப் படங்கள் நாடக உலகிலிருந்து விடுபட்டு தனித்து இயங்கத் தொடங்கின.

அந்த காலகட்டத்தில் நவீன நாடகங்கள் மூலம், மேடைகளில் வெற்றி பெற்று, மீண்டும் நாடக உலகத்தை நோக்கி தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர் பாலசந்தர்.

MGR & K.Balachanderஉச்ச நட்சத்திரங்கள் பின்னால் போகாதவர் என்றாலும், அவரை தமிழ் சினிமாவுக்குள் கைப்பிடித்து அழைத்து வந்தவர் எம்ஜிஆர்தான் என்பது ஓர் இனிய முரண்பாடு. எம்ஜிஆர் நடித்த ‘தெய்வத்தாய்’ படத்தின் மூலம்தான் பாலசந்தர் வசனகர்த்தாவாக அறிமுகமானார்.

அவர் எழுதிய கதைகள் முதலில் நாடக வடிவில் மேடையேற்றப்பட்டு, வெற்றிகண்டு, மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்ற பின்னர் வரிசையாக திரைப்படங்களாக உருவெடுத்தன.

இந்த நடைமுறையில் ஏராளமான படங்களுக்கு அவர் திரைவடிவம் கொடுத்தார். மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, எதிர்நீச்சல் போன்ற வெற்றிப் படங்கள் எல்லாம் முதலில் அவரது கைவண்ணத்தில் நாடகங்களாக மலர்ந்து வெற்றி கண்டவை.

நடிகர்களை உருமாற்றியவர்

மேஜர் சந்திரகாந்த் படத்தில் மேஜர் பாத்திரம் ஏற்றதால்தான் சுந்தரராஜனாக இருந்த ஒரு சாதாரண நடிகர் மேஜர் சுந்தரராஜன் என்ற பெயரில் புகழ் பெற்றார்.

kamal-haasan-balachanderஉதவி நடன இயக்குநராக இருந்த ஓர் இளைஞரை – இயக்குநராக வரவேண்டும் என்ற கனவுகளோடு இருந்தவரை – முதலில் நடி அதற்குத்தான் நீ பொருத்தம் என அடையாளம் கண்டு – தொடர்ந்து அவருக்கு 36 படங்களில் வாய்ப்பு கொடுத்து இன்றைய கமலஹாசனாக அவர் உருவெடுக்க பாதை போட்டுக் கொடுத்தவர் பாலசந்தர்.

திரைப்படக் கல்லூரியில் தான் பார்த்த கறுப்பு நிற வித்தியாச முகமும், கூர்மையான கண்களும் கொண்ட முன்னாள் பஸ் கண்டக்டர் ஒருவரை – வில்லனாக நடிக்க ஆர்வம் கொண்டிருந்த சிவாஜி ராவ் என்ற பெங்களூர்க்காரரை – ரஜினிகாந்த் என்று பெயரிட்டு அவருக்கு வரிசையாக மாறுபட்ட கதாபாத்திரங்களைக் கொடுத்து, அவர் இன்றைய சூப்பர் ஸ்டாராக உயர அடித்தளம் அமைத்தவரும் அவர்தான்.

தொடர்ந்தாற்போல், அவரது அரங்கேற்றம், தண்ணீர் தண்ணீர், உன்னால் முடியும் தம்பி போன்ற படங்கள் ஏற்படுத்திய சமூக விழிப்புணர்வுகளுக்கும்,  தாக்கத்திற்கும் நிகராக வேறுபடங்களை குறிப்பிட முடியாது.

தமிழ் நாட்டில் எதிர்காலத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஆதிக்கத்தை தூரநோக்கத்தோடு சிந்தித்து, தொலைக்காட்சித் தொடர்களை உருவாக்கிய முன்னோடியும் பாலசந்தர்தான். அவர் காட்டிய வழியில்தான் இன்றைக்கு எல்லா தமிழ் நாட்டு தொலைக்காட்சி அலைவரிசைகளும் தொடர் நாடகங்களின் ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றன என்றால் அது மிகையாகாது.

இவ்வாறு ஒரு கட்டுரைக்குள் அடக்க முடியாத பல பெருமைகளை – பல சாதனைகளைத் தனது நீண்ட சினிமா பயணத்தில் வரலாற்று நிகழ்வுகளாக மாற்றிக் காட்டிய பாலசந்தரின் மறைவு உண்மையிலேயே தமிழ்த் திரையுலகின் பேரிழப்பாகும்.

-இரா.முத்தரசன்