சென்னை – தமிழ்த் திரையுலகின் பாதையையே திருப்பிப் போட்ட – திருத்தி அமைத்த – மூன்று இயக்குநர்களாக, ஸ்ரீதர், கே.பாலசந்தர், பாரதிராஜா ஆகிய மூவரையும் குறிப்பிடலாம்.
அவர்களின் பாதையில் அடுத்து வந்த மணிரத்னம், ஷங்கர், மகேந்திரன், பாலு மகேந்திரா, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பல இயக்குநர்கள் முத்திரை பதித்தாலும் மேற்குறிப்பிட்ட மூவரின் சாதனைகள் இன்னும் பேசப்படுகின்றன.
அதிலும் கே.பாலசந்தர், திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களைத தேடிச் செல்லாமல், சாதாரண புது நடிகர்களை நடிக்க வைத்து அவர்கள் உச்ச நட்சத்திரங்களாக உருவாகக் காரணமாக இருந்தார்.
இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் இருவரையும் செதுக்கி இன்றைய நிலைக்கு உருவாக்கியவர் கே.பாலசந்தர்.
கே.பாலசந்தருக்கு இன்று 90-வது பிறந்த நாள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு காணொளி வழி இன்று வெளியிட்ட செய்தியில் ரஜினிகாந்த் பாலசந்தருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
தனது பலவீனங்களை நீக்கி, தனது பலங்களை தனக்கே எடுத்துக் காட்டி தான் இத்தனை பெரிய நடிகராகவும், வசதிகளோடும் இன்று இருப்பதற்கு பாலசந்தரே காரணம் என ரஜினி நினைவு கூர்ந்தார்.
“பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்படாமல் போயிருந்தாலும் ஒரு நடிகனாக வலம் வந்திருப்பேன். ஆனால், கன்னடப் படங்களில் சிறிய வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்திருப்பேன். இந்த அளவுக்கு பெரிய நடிகனாக வந்திருக்க மாட்டேன்” என ரஜினி உருக்கத்துடன் அந்தக் காணொளியில் கூறியிருக்கிறார்.
ரஜினி காந்த் தனது குருவான பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் காணொளியைக் கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் காணலாம் :