கோலாலம்பூர், டிசம்பர் 28 – நாடு முழுவதும் 8 மாநிலங்களில் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டுள்ள நிலையில் கிளந்தானில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 111,376 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளந்தான் மாநிலத்தின் பெங்கலான் செப்பா என்ற வட்டாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் மோசமான நிலைமையை எடுத்துக் காட்டும் ஆகாய வழி எடுக்கப்பட்ட படக் காட்சி.
கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளங்களிலேயே மோசமானது என அரசாங்கம் தற்போதையை நிலைமையை வர்ணித்துள்ளது.
இங்குள்ள பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தும்பாட் பகுதியில் மட்டும் 26 ஆயிரம் பேர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோத்தா பாருவில் சுமார் 24 ஆயிரம் பேரும், பாசிர் மாஸ் பகுதியில் சுமார் 12 ஆயிரம் பேரும், கோலக்கிராயில் சுமார் 5 ஆயிரம் பேரும் வெள்ளப் பேரிடரால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் தற்போது நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சில பகுதிகளில் வெள்ளம் வடிந்து வந்தாலும், உணவுப் பொருட்களின் விநியோகிப்பு தடைப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் இல்லங்களுக்குத் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் அமெரிக்காவில் விடுமுறையில் இருந்த பிரதமர் நஜிப் தனது விடுமுறையை சுருக்கிக் கொண்டு நாடு திரும்பிய பின்னர், இன்று பகாங் மாநிலத்தின் லிப்பிஸ், தெமர்லோ, ஜெரண்டுட் வட்டாரங்களில் வெள்ள நிலைமையைக் கண்டறிய நேரடியாக வருகை புரிந்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பும் மையமாக சுபாங் விமானப் படைத் தளம் தற்போது செயல்பட்டு வருகின்றது. சுபாங் விமானப் படைத் தளத்தில் நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீர்ர் ஒருவர்.
படங்கள்: EPA