கோலாலம்பூர், டிசம்பர் 28 – வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் நேற்றும் இன்றும் பார்வையிட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக 50 கோடி ரிங்கிட் அளவிற்கு நிதி வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.
தற்போது நாடு முழுவதும் 8 மாநிலங்களில் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்திற்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் தனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு, அமெரிக்காவில் இருந்து அவசரமாக நாடு திரும்பியுள்ள பிரதமர் நஜிப், வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை நண்பகலில் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டு கிளந்தான் மாநிலத்தின் கோத்தாபாரு, பாசீர்மாஸ், தானாமேரா உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ அரசாங்கம் 50 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியாக ஒதுக்கியுள்ளது என அறிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எண்ணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.