Home உலகம் ஐ.நா.சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்!

ஐ.நா.சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்!

588
0
SHARE
Ad

unஇஸ்லாமாபாத், டிசம்பர் 29 – பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் 6 தலீபான் தீவிரவாதிகள் கடந்த 16–ஆம் தேதி புகுந்து, 132 குழந்தைகள் உள்பட 150 பேரை சுட்டுக்கொலை செய்தது, உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம், பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் அரசையும் உலுக்கி உள்ளது. இதையடுத்து அங்கு தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது ராணுவ விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி வருகின்றன.

தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் பெஷாவர் பள்ளியில் தலீபான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கர சம்பவத்தை தொடர்ந்து அங்கு மீண்டும் தூக்கு தண்டனை கொண்டுவரப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிகள் தொடர்ந்து தூக்கிலிடப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் தீவிரவாத வழக்குகளில் விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க 2 ஆண்டுகள் சிறப்பு ராணுவ நீதிமன்றத்தை அமைக்க உள்ளது.

தொடர்ந்து பாகிஸ்தான் அரசு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் தீவிரவாதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டி வருகிறது.

கடந்த சில நாட்களாக தூக்கு தண்டனை பெற்ற தீவிரவாதிகளுக்கு படிப்படியாக தண்டனையை பாகிஸ்தான் அரசு நிறைவேற்றி வருகிறது.

6 தீவிரவாதிகள் தூக்கில் போடப்பட்டனர். இன்னும் அங்கு 8 ஆயிரம் கைதிகள் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தூக்கில் போடப்படுவதற்காக காத்திருக்கின்றனர்.

ஆனால் பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருப்பது, அனைத்துலக அளவில் மனித உரிமை அமைப்புகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுடன் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், கிறிஸ்துமஸ் பண்டிகையன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர், பாகிஸ்தானின் கடினமான சூழ்நிலையை கவனத்தில் கொண்டுள்ள போதிலும், மரண தண்டனை கைதிகளின் தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்கவேண்டும்.

மரண தண்டனைமீது மீண்டும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதே போன்று ஐரோப்பிய ஒன்றியமும் பாகிஸ்தானை வலியுறுத்தியது.

இது தொடர்பாக பாகிஸ்தானுக்கான ஐரோப்பிய ஒன்றியம் தூதுக்குழு, ‘தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் மரண தண்டனை வலுவான ஒரு கருவியாக இருக்கும் என்று நாங்கள் நம்பவில்லை.

2008-ம் ஆண்டுமுதல் அமலில் இருந்து வந்த மரண தண்டனை மீதான தடையை அகற்றியது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. எல்லா சூழ்நிலைகளிலும், மரண தண்டனையை நாங்கள் எதிர்க்கிறோம்’ என கூறியது.

ஆனால் ஐ.நா.சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கையை பாகிஸ்தான் திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘அனைத்துலக சமுதாயத்தை பாகிஸ்தான் மதிக்கிறது.

ஆனால் எங்கள் நாடு இப்போது கடினமான சூழ்நிலைகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இது வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம். அமைதியான பாகிஸ்தான் வேண்டும் என்பதுதான் உலகின் விருப்பமாக அமைந்துள்ளது’ என கூறினார்.

பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர்  தஸ்னிம் அஸ்லாம் கூறுகையில், ‘ஐ.நா.வின் மனித உரிமை உடன்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியதின் கடமைகளை பாகிஸ்தான் அறிந்திருக்கிறது. அதே நேரத்தில் மரண தண்டனையை நிறைவேற்றுவது என்பது அனைத்துலக சட்டத்தை மீறிய செயல் அல்ல’ என்றார்.