ஜாகர்த்தா, டிசம்பர் 30 – ஜாவா கடல் பகுதியில் , ஏர் ஆசியா விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கருதப்படும் இடத்தில் மிதக்கின்ற பொருட்கள் ஏறத்தாழ 95 சதவீதம் அந்த விமானத்தின் பாகங்கள்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏர் ஆசியாவின் பயணி ஒருவரின் உடல் ஒன்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மீட்புக் குழுவினர்
இதனைத் தொடர்ந்து இதுவரை 40க்கும் மேற்பட்ட பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள இந்தோனிசிய மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இனி அந்த சடலங்களை பயணிகளின் உறவினர்கள் அடையாளம் காணும் படலம் அடுத்த கட்டமாக தொடரும்.
கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் கடல் நீரில் நீண்ட நேரம் இருந்த காரணத்தால் உடல்கள் உப்பிப் பெருத்துக் காணப்படுகின்றன எனத் தகவல்கள் கூறுகின்றன.
விமானத்தின் உடைந்த சிதிலங்களும் மீட்புக் குழுவினரால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிதிலங்கள் காணாமல் போன ஏர் ஆசியாவின் விமானத்தின் பாகங்கள்தான் என்பதை ஏர் ஆசியா நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தகவல்களைத் தொடர்ந்து, சுரபாயா நகரின் ஜூவாண்டா விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள, ஏர் ஆசியா அவரச முகாமின் அறையிலும், ஏர் ஆசியா வட்டாரங்களிலும் சோகம் சூழ்ந்தது.
கடந்த இரண்டு நாட்களாக காத்திருந்த பயணிகளின் உறவினர்களின் கண்ணீரும், கதறலும் பார்க்கின்ற அனைவரின் நெஞ்சைப் பிளப்பதாக அமைந்திருந்தது.