கோலாலம்பூர், டிசம்பர் 31 – கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளப் பேரிடருக்கு இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் மொத்தம் 2 லட்சத்து 19 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடெங்கிலும் நீடித்து வரும் மழை மற்றும் பெருக்கெடுத்துள்ள வெள்ளம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளம் வடிந்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், வானிலை மேலும் மோசமடைந்ததால், மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களான கிளந்தான், திரெங்கானு மற்றும் பகாங்கில் உடனடியாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை நீடிக்கும் மழைக்காலத்தில் இப்பகுதிகளில் கனமழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுப்பதும் வாடிக்கை. எனினும் இந்தாண்டு மழையின் சீற்றம் வழக்கத்தைவிட கடுமையாக இருக்கிறது.
இந்தளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து வெள்ளம் வடிந்ததும் ஆய்வு செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரை மாநிலங்களுக்கான பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, இரயில், பஸ் சேவைகளும் தடைபட்டுள்ளன.
இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் ஒரு வாரத்திற்குப் பிறகே திறக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
படங்கள்: EPA