ஜாகர்த்தா, டிசம்பர் 31 – காணமல் போன ஏர் ஆசியா விமானத்தின் பாகங்கள் கடலில் மிதப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் மன்னிப்பு கோருவதாக ஏர் ஆசியா தலைமை செயல் இயக்குநர் டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
“ஏர் ஆசியாவின் QZ8501 விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தாருக்காக எனது இதயம் முழுவதும் சோகம் நிறைந்துள்ளது. ஏர் ஆசியா சார்பில் அவர்கள் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஏர் ஆசியா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்,” என டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏர் ஆசியா விமானம் கடலில் விழுந்தது என்ற தகவலை இந்தோனேசிய விமானப் போக்குவரத்து துறையின் தலைவர் ஜோகோ முர்ஜாட்மோட்ஜோ செவ்வாய்க்கிழமை மதியம் உறுதி செய்தார்.
இதையடுத்து டுவிட்டர் தளத்தில் தனது இரங்கலைப் பதிவு செய்தார் டோனி பெர்னாண்டஸ்.