ஜனவரி 2 – பொதுவாக ஒரு காதல் ஜோடிக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பினால், நண்பர்கள் சேர்த்து வைப்பார்கள். நண்பர்களே காதலுக்கு எதிரிகளாகி ஜோடியை பிரிக்க செயல்பட்டால்?
இதுதான் ஒற்றை வரியில் கப்பல் திரைப்படத்தின் சுருக்கம்!.
வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன் நடிக்கும் இத்திரைப்படத்தை ஐ ஸ்டுடியோஸ் (I Studios) தயாரிக்க, ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் ஜி. கிரிஷ் எழுதி இயக்கியுள்ளார். வெகு நாட்களுக்கு பிறகு இயக்குனர் ஷங்கரே தனது எஸ்.பிலிம்ஸ் (S Films) சார்பாக வெளியிட்டிருப்பதனால், ரசிகர்களிடையே இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கதை
ஊரில் பள்ளி நாட்களிலிருந்தே இணைபிரியாத ஐந்து நண்பர்கள், தங்களுக்கு திருமணம் நடந்தால் நட்பு சிதறிவிடும் எனக் கருதி திருமணம் செய்து கொள்வது இல்லை (அல்லது பஞ்ச பாண்டவர்கள் பாணியில் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்!) என்று சத்தியம் செய்துகொள்கின்றனர். வளர்ந்த பிறகு அவர்களில் ஒருவரான வைபவ் ஒரு பெண்ணை விரும்ப, தனது நண்பர்களால் ஏற்படும் பிரச்சனைகள்தான் மீதி கதை.
படத்தின் மிகப்பெரிய பலம், நகைச்சுவை மற்றும் நகைச்சுவை மட்டுமே. சமீப காலமாக காமெடி படம் என்கிற பெயரில் நம் கழுத்தை பதம் பார்த்த பல திரைப்படங்களுக்கு மத்தியில், ‘கப்பல்’ நல்ல ஆறுதல்.
ஆரம்பத்தில் வைபவ் தனது நண்பர்களை அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே திரையரங்கில் சிரிப்பொலிகள் தொடங்கிவிடுகின்றன. வெறும் வசனங்களில் மட்டுமில்லாமல், காட்சியமைப்பிலும் நகைச்சுவை சேர்த்திருப்பதில் இயக்குனர் கார்த்திக் நம் கவனத்தை ஈர்க்கிறார். படத்தில் வைபவ் -ரௌடிகளுக்கு இடையே நடக்கும் முதல் ‘சண்டை’ காட்சி, ரசிகர்களிடையே கண்டிப்பாகப் பேசப்படும்.
தனிக் கதாநாயகனாக வைபவ்
பொதுவாக வெங்கட் பிரபு படங்களில் நான்கு-ஐந்து பேரில் ஒருவராக வரும் வைபவ், இதில் தனி நாயகனாக வெற்றியடைந்திருக்கிறார். அவரின் வசன உச்சரிப்பும் உடல் மொழியும் கூடுதல் பலம்.
நாயகி சோனம் பஜ்வா வெறுமனே அழகாக வந்து போகாமல், பல இடங்களில் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். சரியான படங்களை தேர்வு செய்தால் ஒரு ரவுண்டு வரலாம். நண்பர்களாக வரும் கருணா-அரவிந் பட்டாளமும், வைபவின் ‘காட்பாதராக’ வி.டி.வி கணேஷும் தங்களுக்கான பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கின்றனர். நாயகியை திருமணம் செய்துக்கொள்ள விரும்பும் அந்த பணக்கார பையனின் பாத்திர தேர்வு சிறப்பு.

சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் பலரையும் திரும்பி பார்க்க வைத்த தினேஷின் ஒளிப்பதிவு, அளவான பட்ஜெட்டிலும் தேவைக்கேற்ற பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கிறது. நடராஜன் சங்கரன் இசையில் பாடல்கள் இன்றைய இளைஞர்களை கவரும். குறிப்பாக ‘காதல் கசார்ட்டா’ பாடலும் படமாக்கிய விதமும் இனிமை.
‘காதல் கசார்ட்டா’ பாடலில் எல்லா இனிப்பு வகைப் பலகாரங்களின் பெயர்களையும் கோர்த்து மதன் கார்க்கி பாடலை உருவாக்கியிருக்கின்றார்.

பலவீனங்கள்
படத்தின் ஓரே பலவீனம் இரண்டாம் பாதியின் நீளம் மட்டுமே. கதைக்கு சம்பந்தம் இல்லாமல் வரும் சிறு சிறு காட்சிகளை நறுக்கியிருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்குமே? படத்தொகுப்பாளர் ஆண்டனி கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
என்னதான் பின் பாதி பயணத்தில் இந்த கப்பல் சில இடங்களில் தடுமாறினாலும், இறுதியில் பத்திரமாகவே கரை சேர்ந்திருக்கிறது. படத்தின் இறுதி உச்சகட்டக் காட்சியில் அந்த கல்யாண கலாட்டா, பல படங்களை ஞாபகப்படுத்தினாலும், ரசிக்க முடிகிறது.
அண்மைக் கால தமிழ் நகைச்சுவைப் படங்களில் முன்னோடிப் படமாக ‘கல்ட் க்லாஸிக்’ (Cult Classic) இடத்தை பிடித்திருக்கும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ அளவுக்கு இல்லை என்றாலும், இரண்டரை மணி நேரத்துக்கு கண்டிப்பாக அனைத்து பிரச்சனைகளையும், கவலைகளையும் மறக்கடித்து நம் வயிற்றை குலுங்க வைக்கும் இந்த கப்பலில் தாராளமாக பயணிக்கலாம்!
-செல்லியல் விமர்சனக் குழு
(பின்குறிப்பு: கப்பல் திரைப்படம் கடந்த வாரமே தமிழகத்தில் வெளியாகிவிட்டது. இருப்பினும் நமது நாட்டில் கடந்த வாரம் மூன்று புதிய தமிழ்ப் படங்கள் வெளியீடு கண்டதால் – இடையே லிங்காவும் ஓடிக் கொண்டிருந்ததால் – கப்பல் வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் கப்பல் படத்திற்குக் கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக இன்று முதல் மலேசியாவில் திரையீடு காண்கிறது கப்பல்)