கோத்தாகினபாலு, ஜனவரி 2 – இதுவரை காணப்படாத வகையில் சபாவில் உள்ள பியூஃபோர்ட் நகரின் தென் மேற்கே உள்ள பின்சுலுக் கடற்கரையோரம் ஆயிரக்கணக்கான சிப்பி மீன்கள் (Shell fish) இறந்து கிடக்கின்றன. இது அப்பகுதியில் வானிலை மேலும் மோசமடைந்து, பூகோள ரீதியான பேரிடர்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம் எனும் கவலை எழுந்துள்ளது.
டுன்டுன் என்றழைக்கப்படும் இவ்வகை மீன்கள் ஏராளமாக செத்து கரை ஒதுங்கியிருப்பதை கம்போங பின்சுலுக் கிராம மக்கள் முதன் முதலில் திங்கட்கிழமையன்று கண்டனர்.
“இதற்கு மோசமான வானிலையே காரணமாக இருக்கும் என்பதுதான் மீன்களைக் கண்டதுமே என் மனதில் முதலில் தோன்றிய எண்ணம்,” என்கிறார் அருகிலுள்ள கம்போங் பிம்பிங்கைச் சேர்ந்த இல்லத்தரசியான நோர்லிடா வாஸ்லி.
எனினும் இந்தப் பயமானது இறந்து கிடந்த மீன்களைச் சேகரிக்கும் அப்பகுதி கிராம மக்களின் ஆர்வத்தைக் குறைத்ததாகத் தெரியவில்லை.
ஜங்மி புயலால் சபா வட்டாரம் மோசமாக பாதிக்கப்படலாம் என்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செய்தி தன்னை பயம் கொள்ள வைத்திருப்பதாகச் சொல்கிறார் நோர்லிடா.
“ஏதும் விபரீதமாக நடந்துவிடாது என நம்புகிறேன். இந்தப் புத்தாண்டு அமைதியாகத் தொடங்க வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்கிறார் நோர்லிடா.
எனினும் திங்கட்கிழமை முதல் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் டெலிபோக், மற்றும் கோத்தா பெலுட் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.