டோஹா, ஜனவரி 2 – 2022-ம் ஆண்டில் மத்திய கிழக்கில் உள்ள கத்தார் நாட்டில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் நடக்க உள்ளன. அதற்கான கட்டுமானப் பணிகளை செய்து வரும் கத்தார் அரசு, தொழிலாளர்களை கடுமையான பணிச்சுமைக்கு ஆளாக்குவதால், பலர் பலியாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கத்தாரில் 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை நடத்த அனுமதி கொடுத்ததே பலத்த சர்ச்சைகளைக் ஏற்படுத்தி உள்ள நிலையில், கட்டுமானப் பணிகளின் போது 50 டிகிரி வெப்பத்தை தாங்க முடியாமல், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 2 நாட்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் உயிரிழந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக தி கார்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2014-ம் ஆண்டில் மட்டும் 2 நாட்களுக்கு ஒரு நேபாள தொழிலாளி அங்கு பலியாகி உள்ளார். இந்த எண்ணிக்கைகளில் இந்திய, இலங்கை, வங்கதேச தொழிலாளர்கள் இல்லை. மேலும், அங்கு கட்டுமானப் பணிகளில் போதிய பாதுகாப்பு இன்மையாலும் தொழிலாளர்கள் பலியாகும் விகிதம் அதிகரித்துள்ளது.”
“கடந்த ஆண்டு இந்த குற்றச்சாட்டு அம்பலமான நிலையில், கத்தார் நிர்வாகம், கட்டுமானப் பணிகள் தகுந்த முறையில் சீரமைக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தது. இதற்காக சர்வதேச சட்ட நிறுவனமான டி.எல்.ஏ பைப்பர் என்ற நிறுவனத்தை விசாரணைக்கும் அழைத்திருந்தது. எனினும், இவை அனைத்தும் சரியான முறையில் நடைபெறுவதில்லை”
“50 டிகிரி செல்சியஸ் வெயிலில் கூடுதல் நேரம் வேலை வாங்குவது பற்றி எந்த ஒரு சீர்திருத்தமும் செய்யப்படவில்லை என்று மனித உரிமை கண்காணிப்பு ஆணையம் சாடியுள்ள நிலையில், கத்தார் தனது பணிகளை தொடர்ந்து வருகின்றது.”
“ஜனவரி 2014 முதல் நவம்பர் மாதம் பாதி வரை சுமார் 157 நேபாளப் பணியாளர்கள் பலியாகியுள்ளனர். இதனை அந்நாட்டு பணி நியமன வாரியம் தெரிவித்துள்ளது. 2012-2013 ஆம் ஆண்டுகளில் மட்டும் இந்திய, வங்கதேச, நேபாள் நாடுகளின் தொழிலாளர்கள் 964 பேர் பலியாகியுள்ளதாக அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன” என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கவுரவத்திற்காகவும், பெருமைக்காகவும் உலகக் கோப்பை போட்டியினை கண்ணும் கருத்துமாக நடத்த இருக்கும் கத்தார் அரசு, பிற நாட்டு தொழிலாளர்களின் நலனிலும் அதே அளவு அக்கறையை செலுத்த வேண்டும் என்று தி கார்டியன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.