கோலாலம்பூர், ஜனவரி 3 – ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணையும் பொருட்டு சிரியா செல்ல இருந்த இருவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இருவரில் முதல் நபராக, கடந்த டிசம்பர் 24ஆம் தேதி நெகிரி செம்பிலானைச் சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மலேசியக் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கார் தெரிவித்துள்ளார்.
“யூ டியூப் அகப்பக்கம் வழி ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு குறித்த காணொளி தொகுப்பை கண்ட அப்பெண், அதன் மூலம் அந்த அமைப்பில் சேர தூண்டப்பட்டுள்ளார். இதையடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ்., உறுப்பினர் ஒருவருடன் பேஸ்புக் மூலம் அவர் தொடர்பில் இருந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் இப்பெண் குறித்து தெரியவந்தது,” என்றார் காலிட்.
சந்தேக வளையத்தில் உள்ள அப்பெண் பின்னர் மொராக்கோ நாட்டவரான, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஆடவரை கடந்த டிசம்பர் மாத மத்தியில் இணைய காணொளி வசதி மூலம் திருமணம் செய்து கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், அவரது கணவரே பிறகு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேருமாறு பேசி அப்பெண்ணை சம்மதிக்க வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
“இதையடுத்து கடந்த டிசம்பர் 28ஆம் தேதியன்று திரங்கானுவைச் சேர்ந்த 22 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் பெர்லிஸ் பகுதியில் உள்ள உயர்கல்வி நிலையத்தில் பயின்று வந்தவர். யூடியூப் அகப்பக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு குறித்த காணொளியை இவரும் கண்டுள்ளார். பிறகு சிரியாவில் உள்ள மலேசியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அந்த அமைப்பு உறுப்பினர்களுடன் பேஸ்புக் வழி தொடர்பு கொண்டுள்ளார். இவர் சிரியா சென்று அங்கு நடக்க இருக்கும் தற்கொலை தாக்குதலில் பங்கெடுக்க திட்டமிட்டு இருந்ததாக நம்பப்படுகிறது,” என்றும் காலிட் அபுபாக்கார் மேலும் விவரித்தார்.
இந்த இருவரையும் சேர்த்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேரவிருந்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை இதுவரை 51 மலேசியர்களைக் கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.