ஜாகர்த்தா, ஜனவரி 2 – விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானத்தின் பயணிகளில் இதுவரை 30 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் சடலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பயணிகளின் சடலங்களில் 5 பேர் தங்களின் இருக்கைகளோடு பிணைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஜாவா கடலுக்கடியில் அமிழ்ந்திருக்கலாம் என நம்பப்படும் ஏர் ஆசியா விமானத்தின் பாகங்களைத் தேடும் படலம் இன்னும் தீவிரமாகத் தொடர்கின்றது.
ஏர் ஆசியா விமானத்தின் வால் பகுதி என நம்பப்படும் பாகம் ஒன்றை இன்று இந்தோனேசிய கடற்படைக் கப்பல் கண்டு பிடித்துள்ளதாகவும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் பாகத்தை கரிமாத்தா (Karimata Strait) நீரிணைப் பகுதியில் 29 மீட்டர் கடல் ஆழத்தில் சோனார் (Sonar) என்ற கருவியின் துணையோடு கண்டு பிடித்திருக்கின்றார்கள். சோனார் என்பது கடலின் ஆழத்தின் பொருட்களைக் கண்டுபிடிக்க உதவும் கருவியாகும்.
மத்திய போர்னியோவில் உள்ள பெங்கலான் பன் என்ற இடத்தில் உள்ள சுல்தான் இமானுடின் மருத்துவமனையில் ஏர் ஆசியா பயணிகளின் சடலங்கள் கிடத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கிருந்து விமானம் மூலம் சவப் பெட்டிகள் சுரபாயா கொண்டு செல்லப்படுகின்றன.
படங்கள்: EPA