இஸ்லாமாபாத், ஜனவரி 5 – புத்தாண்டு தொடக்கம் முதல், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு இராணுவ வீரர்களும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கி உள்ள நிலையில், எல்லை விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான், இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீரின் சம்பா, கதுவா மாவட்ட எல்லையோர கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்தினர் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், சியால்கோட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகின்றது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் இராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், “எல்லையில் அமைதியை ஏற்படுத்தவே பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில், கடந்த சில மாதங்களாக நாங்கள், இந்தியாவுடன் நல்லுறவை பேண பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம்.”
“ஆனால் எங்களது சமரச மொழி இந்தியாவிற்கு புரியவில்லை. அதனால், இனி அவர்களுக்கு புரியும் மொழியிலேயே நாங்கள் தொடர்பு கொள்ளப் போகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
கவாஜாவின் அறிக்கையில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் உறவு மிக மோசமான கட்டத்தை எட்டி உள்ளதாக கருதப்படுகின்றது.
படங்கள்:EPA