கொழும்பு, ஜனவரி 7 – இலங்கை அதிபராக கடந்த 2005-ஆம் ஆண்டு ராஜபக்சே பதவி ஏற்றார். 2008-ஆம் ஆண்டு அவர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் தொடுத்தார். 2009-ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. அந்த செல்வாக்கை பயன்படுத்தி, அதிபர் தேர்தலை முன்கூட்டியே அறிவித்தார்.
2010-ஆம் ஆண்டு நடைபெற்ற அத்தேர்தலில், அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை வீழ்த்தி மீண்டும் அதிபர் ஆனார். இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி, ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும்.
மூன்றாவது முறையாக பதவிக்கு வர விரும்பும் ராஜபக்சே, இந்த சட்டப்பிரிவை திருத்தினார். அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்பும் அவரது நடவடிக்கைக்கு ஆளுங்கூட்டணியிலும் எதிர்ப்பு எழுந்தது. கூட்டணி கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடுத்தடுத்து விலகினர்.
அதை பொருட்படுத்தாமல் ராஜபக்சே, அதிபர் தேர்தலை மீண்டும் முன்கூட்டியே நடத்த தீர்மானித்தார். அதன்படி நாளை (வியாழக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலில், ராஜபக்சேவின் சுதந்திரா மக்கள் கட்சியின் பொதுச்செயலாளராகவும், சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்த மைத்ரி பாலா சிறிசேனாவை எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக நிறுத்தி உள்ளன.
அவருக்கு தமிழர் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. சிறிசேனாவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அணி மாறி வருவதால், ராஜபக்சேவுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அவர் தோல்வி பயத்தில், நாட்டை விட்டு தப்பிச்செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
ராஜபக்சேவும், சிறிசேனாவும் பெரும்பான்மை சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவை பெறுபவரே வெற்றி பெற முடியும் என்ற நிலை காணப்படுகிறது. எனவே, தமிழர்களின் ஓட்டுகளை பெற ராஜபக்சே இறங்கி வந்துள்ளார்.
‘தெரியாத தேவதையை (சிறிசேனா) விட, தெரிந்த பிசாசுக்கே (ராஜபக்சே) வாக்களியுங்கள்’ என்று அவர் கெஞ்சும் பாணியில் தமிழர்களிடம் ஓட்டு கேட்டார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது.
நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 18 வயது பூர்த்தி அடைந்த, இலங்கை குடிமகனாக உள்ள, 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையின் வெளியே உள்ள அனைவரும் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்கள் ஆவர்.
கடந்த ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடைபெற்றது. பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் ஓட்டு போடலாம்.
வாக்காளர் அட்டை இல்லாதவர்கள், தேசிய அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், முதியோர் மற்றும் ஓய்வூதியர் அடையாள அட்டை போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தை காண்பித்து ஓட்டு போடலாம்.
ஓட்டு போடுவதற்காக, அனைவருக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போன்ற தூரமான பகுதிகளில் ஓட்டு இருப்பவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை மாலை 4 மணிக்கு வாக்குபதிவு முடிவடைந்தவுடன், ஓட்டுப்பெட்டிகள், சம்பந்தப்பட்ட ஓட்டு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கு அனைத்து கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில், நாளை இரவு 8 மணிக்கே ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விடும்.
இந்த தேர்தலில், ராஜபக்சேவுக்கும், சிறிசேனாவுக்கும் இடையேதான் போட்டி என்றாலும், மொத்தம் 19 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில், வாக்காளர்களை குழப்புவதற்காக, ராஜபக்சே, சிறிசேனா என்ற பெயர்களில் வேறு வேட்பாளர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பெயர் மட்டுமின்றி, கட்சி, சின்னம் ஆகியவற்றையும் கவனித்து, விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டி உள்ளது. இந்த குழப்பத்தையும், எதிர்க்கட்சி வேட்பாளரின் கடும் போட்டியையும் மீறி அதிபர் ராஜபக்சே மீண்டும் வெற்றி பெறுவாரா என்பது நாளை மறுநாள் தெரிந்து விடும்.