பாரிஸ், ஜனவரி 8 – சார்லி ஹெப்டே பத்திரிக்கை அலுவலகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான பதற்றம் தணிவதற்குள் பிரான்சில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது.
வியாழக்கிழமை மாலை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் பலியானார். மேலும், சாலை துப்புரவுப் பணியாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இந்தச் சம்பவத்திற்கும் நாளேடு மீதான தாக்குதலுக்கும் தொடர்புள்ளதா? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. முதல் சம்பவத்தில் 2 போலீசார் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
“பொதுமக்கள் இவ்விரு சம்பவங்கள் தொடர்பில் தாங்களாக ஏதும் யூகிக்க வேண்டாம். வியாழக்கிழமை நிகழ்ந்த ஒரு சாலை விபத்து தொடர்பாக விசாரித்துள்ளார் அந்தப் பெண் போலீஸ் அதிகாரி.
அப்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் பின்னர் இறந்தார்,” என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் காசனேவ் தெரிவித்தார்.
“வெள்ளை நிற போலீஸ் வாகனத்தின் முன் பெண் அதிகாரி ஒருவர் நின்றிருந்தைக் கண்டேன். பிறகு அவரைச் சுட்ட நபர் வேகமாக ஓடினார். அந்நபர் கருப்பு நிற உடைகள் அணிந்திருந்தார்.
ஆனால் முகமூடி அணிந்திருக்கவில்லை. அந்நபரின் கையில் சிறிய ரக துப்பாக்கி இருந்தது,” என்று இச்சம்பவத்தை அப்பகுதியில் உள்ள வீட்டிலிருந்து நேரடியாகக் கண்ட சாஸ்சி என்பவர் போலீசாரிடம் விவரித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த உள்துறை அமைச்சர் காசனேவ், அரசு சார்ந்த சந்திப்பு ஒன்றை ரத்து செய்துவிட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இரு துப்பாக்கிச் சூடு சம்பவங்களையடுத்து பிரான்ஸ் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.