கோலாலம்பூர், ஜனவரி 12- நேற்று நடைபெற்ற சீகா எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது பெற்ற கமலஹாசனுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் மலேசியாவின் அஸ்ட்ரோ தொலைக்காட்சி சார்பில் ‘அஸ்ட்ரோ விண்மீன் எச்டி’ சிறப்பு விருதை அஸ்ட்ரோவின் டாக்டர் ராஜாமணி வழங்கினார்.
சீகா விருது விழாவில் கமலஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் வழங்கப்பட்ட பின்னர், மேடையேறிய ராஜாமணியும் அஸ்ட்ரோ இந்தியப் பிரிவின் பொறுப்பாளருமான முரு என அழைக்கப்படும் முருகையாவும் இந்த விருதை வழங்கினர்
அஸ்ட்ரோவில் இன்று 15 இந்திய அலைவரிசைகள் இருந்த போதிலும் உலகத் தரத்திலான எச்டி எனப்படும் துல்லிய ஒளிபரப்பில் உலகின் மற்ற தமிழ் தொலைக்காட்சிகளுக்கு தொழில் நுட்பத்தில் முன்னோடியாக விளங்கி வரும் விண்மீன் எச்.டி. அலைவரிசையின் சார்பில் திறனிலும், தொழில் நுட்பத்திலும் மற்றொரு உச்சகட்ட நட்சத்திரமான கமலஹாசனுக்கு இத்தகையதொரு விருதை வழங்குவதில் தாங்கள் பெருமிதம் கொள்வதாக ராஜாமணி கூறினார்.
கமலஹாசனின் தொழில் நுட்ப அறிவு – ராஜாமணி அனுபவம்
கமலஹாசனின் பங்களிப்பு குறித்து புகழாரம் சூட்டிய ராஜாமணி கமலஹாசன் குறித்த மற்றொரு சுவையான தகவலையும் மேடையில் தெரிவித்தார்.
“கமல் நமது அஸ்ட்ரோ அலுவலகத்திற்கு பல முறை வந்திருக்கின்றார். மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் வந்தவுடன் அவர்களின் பேட்டி முடிந்தவுடன் சென்றுவிடுவார்கள். இவர் ஒருவர்தான், தனது வேலை முடிந்ததும் அஸ்ட்ரோ அலுவலகத்தின் தொழில் நுட்ப மேம்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள விரும்புவார். அது போல, கடைசியாக விஸ்வரூபம் படம் சமயத்தில் அஸ்ட்ரோவுக்கு வந்த கமலஹாசன் ஸ்டுடியோவை சுற்றிப் பார்க்க வேண்டும் என்றும் விரும்பினார். அப்போது நமது அஸ்ட்ரோ ஓ.பி வேனைப் பார்வையிட (Outside Broadcast van-வெளிப்புற படப்பிடிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனம்) அழைத்துச் சென்றோம்”
நமது அஸ்ட்ரோ ஓ.பி வேன் சிறப்பான தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கொண்டிருந்தது. காரணம் மற்ற நிறுவனங்களில் ஓபி வேன்கள் எப்படி இருக்கும் என்றால், சோனி நிறுவனம் என்றால் அந்த ஓபி வேனில் எல்லாமே சோனியின் தயாரிப்புகளை கொண்டிருக்கும். ஆனால் அஸ்ட்ரோ ஓபி வேனில் எந்தெந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் சிறப்போ அவற்றை எல்லாம் கொண்டு வந்து அந்த வாகனத்தை உருவாக்கியிருக்கிறோம். கமல்ஹாசனை எங்கள் ஓபி வேனிற்கு அழைத்துச் சென்ற வெள்ளைக்காரர் ஒருவர் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கமளித்துக் கொண்டிருந்தார். இப்போது இந்த வேனில் இருப்பதுதான் ஆகக் கடைசியாக வெளிவந்திருக்கும் தொழில் நுட்பம், அதனை நாங்கள் கொண்டிருக்கின்றோம் என அந்த வெள்ளைக்காரர் கூறியபோது, கமல்ஹாசன், “இதை விட மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு ஒன்று வந்திருக்கிறது தெரியுமா?” என்று அந்த தொழில் நுட்பத்தைப் பற்றி விளக்க ஆரம்பித்துவிட்டார். அந்த அளவிற்கு ஒரு நடிகராக மட்டுமல்ல தொழில்நுட்பத்திலும் கமல்ஹாசன் மிகவும் மேம்பட்ட அறிவுடன் இருந்தார். கமலஹாசன் போனதும் அந்த வெள்ளைக்காரர் “யார் இவர்? எந்த நிறுவனத்தின் என்ஜினியர்? இவ்வளவு நுணுக்கங்கள் தெரிந்துவைத்திருக்கின்றாரே” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
நாங்களும், இவரும் ஒரு என்ஜினியர்தான். தமிழ்த் திரையுலகின் என்ஜினியர் என பெருமையுடன் பதிலளித்தோம்”
இவ்வாறு கமலஹாசனுடனான அனுபவத்தை விவரித்த ராஜாமணி அந்த வகையில் விண்மீன் எச்.டி. சிறப்பு விருதை கமலுக்கு வழங்குவதில் பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)