Home இந்தியா தேர்தலில் மின்னணு முறையில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க அனுமதி – மத்திய அரசு

தேர்தலில் மின்னணு முறையில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க அனுமதி – மத்திய அரசு

398
0
SHARE
Ad

indian central governmentபுதுடெல்லி, ஜனவரி 12 – கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிப்பது தொடர்பாக பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘தற்போதைய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், வெளிநாடுவாழ் இந்தியர்கள் தேர்தலின்போது தங்களது சொந்த தொகுதிக்கு நேரடியாக வந்து ஓட்டுப்போடலாம் என்கிற சமத்துவமற்ற முறை பின்பற்றப்படுகிறது.

எனவே, அவர்கள் வெளிநாட்டில் இருந்தவாறே, எளிதாக வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. இது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

#TamilSchoolmychoice

இதைத்தொடர்ந்து இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையம், சட்ட அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு அனைத்து தரப்பினரிடமும் இதுபற்றி கருத்துகளை கேட்டறிந்து அதனை பரிந்துரையாக மத்திய அரசிடம் அண்மையில் அளித்தது.

இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு இந்த வாரத்தில் இதை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குழுவின் பரிந்துரைகள் பற்றிய விவரம் தெரிய வந்து உள்ளது. அதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னணு முறை (ஆன்லைன்) மூலம் தங்களுடைய தொகுதிகளில் வாக்களிக்கலாம். இந்த ஓட்டுப்பதிவு முறை முதலில் நாட்டில் ஒன்றிரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் சோதனை செய்து பார்க்கப்படும்.

இது நடைமுறை மற்றும் செயல்முறை ரீதியில் அனைத்து விதத்திலும் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பட்சத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் இந்த முறைக்கு அனுமதி அளிக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல், இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலமாக ‘மறைமுக வாக்குப்பதிவு’ செய்வதை போன்று வெளிநாடு வாழ் இந்தியர்களும் வாக்களிக்க அனுமதிக்கலாம் என்ற மற்றொரு முறையும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசின் இந்த பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், மறைமுக வாக்கு மற்றும் மின்னணு வாக்குபதிவு ஆகிய முறைகளை அமல்படுத்துவது தொடர்பான தேர்தல் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.