Home நாடு உள்துறை அமைச்சர் மீது பிகேஆர் காவல்துறையில் புகார்!

உள்துறை அமைச்சர் மீது பிகேஆர் காவல்துறையில் புகார்!

579
0
SHARE
Ad

ahmad zahidகோலாலம்பூர், ஜனவரி 14- சூதாட்ட முறைகேடு தொடர்பாக அமெரிக்காவில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசியர் ஒருவர் குறித்து, அந்நாட்டு புலனாய்வு அமைப்புக்கு கடிதம் எழுதியது தொடர்பில், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பால் புவா வெய் சங் என்ற மலேசியர் மீது அமெரிக்காவில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரை ஆதரிக்கும் விதமாக அந்நாட்டின் எஃப்.பி.ஐ. (FBI)க்கு உள்துறை அமைச்சர் கடிதம் எழுதியது குறித்து ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ பத்திரிகையில் செய்தி வெளியானது.

இதையடுத்து உள்துறை அமைச்சர் ஹமிடி மீது பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவர் நிக் நஸ்மி நிக் அகமட் போலீசில் புகார் அளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இது சாதாரண விவகாரம் அல்ல. அமெரிக்காவில் சூதாட்டம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒரு மலேசியரைப் பற்றிய வழக்கு. இந்த விவகாரம் குறித்து புத்ராஜெயா அளிக்கும் விளக்கம் குழப்பம் தருகிறது.

மேலும் மத்திய அமைச்சரவைக்கு இதுகுறித்து ஒன்றும் தெரியவில்லை என்பதும் கவலை அளிக்கிறது. இந்த விவகாரம் குறித்து உரிய வகையில் தகவல் பரிமாற்றம் செய்திருக்க வேண்டும்,” என்று நிக் நஸ்மி கூறியுள்ளார்.

அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கு எழுதிய கடிதம் குறித்து உள்துறை அமைச்சர் ஹமிடி விளக்கம் அளிக்க முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், பதிலளிக்காமல் தவிர்க்க இது ஒன்றும் சிறிய விவகாரம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலையில் ஃபிபா உலக கிண்ண காற்பந்து போட்டிகள் நடைபெற்ற போது, லாஸ் வேகாசில் கைது செய்யப்பட்டார் புவா என்பது குறிப்பிடத்தக்கது.