ஜெனிவா, ஜனவரி 17 – மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா உயிர்க் கொல்லி நோயின் தீவிரம் குறைந்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் 20,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7,905 பேர் இறந்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவீதம் பேர் உயிரிழப்பது உறுதியான நிலையில், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் எபோலாவிற்கு தடுப்பு மருந்தினை கண்டறிய முயன்று வருகின்றன.
இந்நிலையில், எபோலாவின் தாக்கம் குறைந்து வருவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிகையில்,
“மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான சியாரா, லியோன், கினியா, லைபீரியா போன்றவற்றில் எபோலா பாதிப்பின் தீவிரம் மெதுவாக குறைந்து வருகின்றது”.
“இதன் காரணமாக மற்ற உலக நாடுகளுக்கு, இந்நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. எனினும், எபோலாவிற்கு எதிரான போராட்டம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை” என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.