வாஷிங்டன், ஜனவரி 20 – இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்ள இருப்பதால்,எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியாவில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 36 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.”
“இந்நிலையில், இம்முறை நடைபெறவுள்ள குடியரசுத் தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்ள இருக்கிறார். அவரது இந்த சுற்றுப்பயணத்தின்போது எல்லைத் தாண்டிய பயங்கரவாத தாக்குதல் நடைபெறாமல் இருக்கவேண்டும். அதனை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும்” என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒபாமா வருகையின்போது பாகிஸ்தானியர்களால் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டது கண்டறியப்பட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்க அதிபரின் இந்திய வருகையையொட்டி, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகமும், பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றது. மேலும், பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.