பெங்களூரு, ஜனவரி 20 – ‘தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகக் கூடாது என, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகக் கூடாது என தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி அப்துல் நஸீர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அன்பழகன் மனுவுக்கு பவானி சிங் வழக்கறிஞர் திவாகர் செபாஸ்டின், சென்னை ஊழல் தடுப்பு போலீஸ் வழக்கறிஞர் மஞ்சுநாத் ராவ் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்நாடகா அரசு தரப்பில் பவானி சிங் மீது சில குற்றச்சாட்டுகள் இருப்பதால் அதை பரிசீலித்த பின் முடிவெடுக்க முடியும் என, அரசு வழக்கறிஞர் ரவிவர்மகுமார் கூறியிருந்தார். முடிவில், நீதிபதி அப்துல் நஸீர் அரசு தரப்பு வழக்கறிஞரை மாற்றுவதால் வழக்கில் தாமதம் ஏற்படலாம்.
எனவே, இவ்விஷயத்தில் வழக்கை நடத்தி வரும் சிறப்பு நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இது குறித்து விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்ப உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில், நீதிபதி அப்துல் நசீர் பரிந்துரை குறித்து, ஆய்வு செய்த கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வஹேலா, ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மூன்று மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதால் கூடுதலாக இவ்வழக்கை விசாரிக்க நீதிபதி குமாரசாமிக்கு அவகாசம் இருக்காது.
எனவே, இம்மனுவை மட்டும் நீதிபதி ஆனந்த பைர ரெட்டி விசாரிப்பார் என்று அவரது நீதிமன்ற அறையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கிடையே அன்பழகன் மனு நேற்று பிற்பகல் 3:00 மணிக்கு விசாரணைக்கு வந்தது.