Home நாடு மஇகாவில் எல்லாப் பதவிகளுக்கும் தேர்தல் – பழனிவேல் வியூகம் சங்கப் பதிவகம் ஒப்புக் கொள்ளுமா?

மஇகாவில் எல்லாப் பதவிகளுக்கும் தேர்தல் – பழனிவேல் வியூகம் சங்கப் பதிவகம் ஒப்புக் கொள்ளுமா?

811
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 21 – மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மேற்கொண்ட புதிய தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய செயலவை நியமனங்கள் செல்லாது என சங்கப் பதிவகம் செய்துள்ள மற்றொரு முடிவு மஇகாவை மேலும் குழப்ப நிலைக்கும், இக்கட்டான நிலைமைக்கும் தள்ளிவிட்டுள்ளது.

zul_palanivel_c57783_11622_307_v06மஇகாவில் மத்திய செயலவைக்கும், தேசிய உதவித் தலைவர்களுக்கும், 90 நாட்களுக்குள் மறு தேர்தல் நடத்த வேண்டுமென சங்கப் பதிவகம் உத்தரவிட்டு ஏறத்தாழ 45 நாட்கள் கடந்து விட்டது. இருப்பினும் விடாப்பிடியாக மஇகா தலைமையகம் இன்னும் அந்த உத்தரவை ஏற்று செயல்படுத்தும் எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

சங்கப் பதிவகத்தின் முடிவை செயல்படுத்த கூடுதல் அவகாசம் கேட்டிருக்கிறோம் என்பதுதான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பிலிருந்து, இதுவரை வெளியிடப்பட்ட பதிலாக இருக்கின்றது.

#TamilSchoolmychoice

பழனிவேலுவின் புதிய அரசியல் வியூகம்

இதற்கிடையில், வெளிநாடு செல்வதற்கு முன்பாக, மஇகா தொகுதிகளின் பொறுப்பாளர்களை சிறு சிறு குழுக்களாக சந்தித்த பழனிவேல் “துணைத் தலைவர் சம்மதத்துடன் மஇகாவில் கிளை, தொகுதி நிலையிலிருந்து எல்லாப் பதவிகளுக்கும் மீண்டும் மறு தேர்தல் நடத்த சங்கப் பதிவதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். காரணம், இந்த ஆண்டு தேர்தல் நடத்தினால், மீண்டும் அடுத்த ஆண்டு மற்றொரு முறை தேர்தல் நாம் தேர்தல் நடத்த வேண்டியிருக்கும்” எனக் கூறியுள்ளதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், பழனிவேலுவின் இந்த முடிவுக்கு தேசியத் துணைத் தலைவர் ஒப்புக் கொண்டாரா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை டாக்டர் சுப்பிரமணியம் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை.

Subramaniamசங்கப் பதிவக உத்தரவால் ஏற்பட்டுள்ள முட்டுக் கட்டைக்கு தீர்வு காண பழனிவேல் வகுத்துள்ள புதிய அரசியல் வியூகம்தான், அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தல் என மஇகா வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

இந்த ஆண்டு கிளை, தொகுதிகளுக்கும் மறு தேர்தல் நடத்திவிட்டு, தொடர்ந்து தேசிய நிலையிலான பதவிகளுக்கும் தேர்தல் நடத்துவதன் மூலம் மீண்டும் தேசியத் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்படலாம் என பழனிவேல் நம்பிக்கை கொண்டுள்ளார்.

சங்கப் பதிவகம் பழனிவேல் வேண்டுகோளுக்கு ஒப்புக் கொண்டால், இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்படும் பொறுப்பாளர்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு – அதாவது 2018 வரை – பதவி வகிப்பார்கள்.

இதன் மூலம் அடுத்த மூன்றாண்டுகளுக்கு தனது தேசியத் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதுதான் பழனிவேலுவின் வியூகம் என அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

மீண்டும் துணைத் தலைவர், தேசியத் தலைவர் பதவிகளுக்குத் தேர்தல் என்று வந்தால், நடப்பு துணைத் தலைவரான டாக்டர் சுப்ரமணியம் மீண்டும் தேசியத் தலைவருக்கான போட்டியில் குதிக்க மாட்டார் என்றும், தனது துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதில்தான் மும்முரமாக இருப்பார் என்றும் பழனிவேல் நம்புகின்றார் என்றும் அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.

சங்கப் பதிவகம் ஏற்றுக் கொள்ளுமா?

ஆனால், பழனிவேலுவின் இந்த புதிய முன்மொழிதலை சங்கப் பதிவதிகாரி ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகம்தான். காரணம், ஒரு முறை அறிவித்துவிட்ட முடிவை மீண்டும் மாற்றுவதற்கு சங்கப் பதிவகம் ஒப்புக் கொள்ளாது என்பதோடு, மீண்டும் கிளை, தொகுதித் தேர்தல்களை நடத்துவது என்பது தற்போதைய பிரச்சனைக்கு தீர்வாகாது.

புகார்கள் ஏதும் இல்லாத பட்சத்தில் மீண்டும், கிளை, தொகுதிகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு சங்கப் பதிவகம் ஒப்புக் கொள்ள வாய்ப்பில்லை.

தேசியத் தலைவரின் புதிய மத்திய செயலவை நியமனங்கள் செல்லாது என சங்கப் பதிவகம் எடுத்துள்ள கடுமையான – உறுதியான நிலைப்பாடு, மஇகா விவகாரத்தில் சங்கப் பதிவகம் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை என்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றது.

தேசியத் துணைத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியமும் பழனிவேல் நாடு திரும்பியவுடன் அவருடன் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்று கூறியுள்ளார்.

800 கிளைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டனவா?

Vigneswaran MIC HQ - Dec 18இந்நிலையில் 800 கிளைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாக முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரனும், முன்னாள் தலைமைப் பொருளாளர் டத்தோ ஆர்.ரமணனும் சங்கப் பதிவகத்தில் சமர்ப்பித்துள்ள புகாரும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் ஏற்பட்டிருக்கும் மற்றொரு திருப்பமாகும்.

இதற்கிடையில், சங்கப் பதிவகத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க வாய்ப்புள்ளதா என்றும் அதன் மூலம் மறு தேர்தல் நடத்தாமல் இந்த விவகாரத்தை மேலும் இழுபறியாக நீட்டிக்கலாமா என்பது குறித்தும் பழனிவேலுவுக்கு நெருக்கமான ஆதரவு வழக்கறிஞர்கள் குழு ஒன்றும் மும்முரமாக ஆராய்ந்து வருகின்றனர் எனவும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது  சபரிமலை ஐயப்பன் யாத்திரைக்காக இந்தியா சென்றுள்ள பழனிவேல், நாடு திரும்பியவுடன் மேற்கொள்ளப் போகும்  முடிவுகளை வைத்துத்தான் கட்சி இனி எந்த திசையில் போகும் என்பது தெளிவாகும்.