ஜகார்த்தா, ஜனவரி 21 – 162 பயணிகளுடன் ஜாவா கடலில் விபத்திற்குள்ளான ஏர் ஆசியா QZ8501 விமானம், கடைசி நிமிடங்களில் தனது வழக்கமான உயரத்தை விட கூடுதலான உயரத்தில் அதிவேகமாகப் பறந்துள்ளதாக இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சர் இக்னாசியஸ் ஜோனன் தெரிவித்துள்ளார்.
நேற்று இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜோனன், “கடைசி நிமிடங்களில், விமானம் திடீரென வழக்கத்திற்கு மாறாக அதிவேகமாகப் பறந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கண்டறியப்பட்ட விமானத்தின் கறுப்புப் பெட்டியில் பதிவாகியிருக்கும் தகவல்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் ஜோனன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 28-ம் தேதி, இந்தோனேசியாவின் சுரபாயா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூரை நோக்கிச் சென்ற ஏர் ஆசியா QZ8501 விமானம், நடுவானில் ரேடார் தொடர்பில் இருந்து மாயமானது.
பின்னர், அடுத்த சில நாட்களில் ஜாவா கடலில் விமானத்தின் பாகங்களும், பயணிகளின் உடல்களும் மீட்கப்பட்டன. இதுவரை 53 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.